Natarajan: "அம்மாவின் சாப்பாடு; வெறும் காலில் ஓட்டம்; தடைக் காலம்" – நடராஜன் ஓப்பன் டாக்

Share

தனது வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பேசியிருகிறார்.

சேலத்தில் தனியார்ப் பள்ளியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடராஜன், தனது வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்களை எடுத்துக்கூறி மாணவ, மாணவிகளை உத்வேகமூட்டும் வகையில் பேசியிருக்கிறார்.

பள்ளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடராஜன்

“நான் தமிழ்நாடு அணிக்காக அறிமுகமான ஆண்டு, என் பவுலிங் ஆக்‌ஷனை சுட்டிக்காட்டி, எனக்குத் தடை விதித்தார்கள். ஒரு வருடம் என்னால் விளையாட முடியவில்லை. இப்பொழுது தான் வாழ்க்கையே தொடங்கியது. ஆனால் அதற்குள் என்னுடைய வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே எனக்கு மிகப்பெரிய மன உளைச்சல் ஏற்பட்டது. ஆனாலும் தொடர்ந்து முயற்சி செய்தேன். நான் கடந்து வந்தது எல்லாமே முள் பாதைதான். பயிற்சி எடுக்கவே இடம் இருக்காது. வெறும் காலில் மூன்று, நான்கு வருடங்கள் ஓடி இருக்கிறேன். என்னிடம் என்ன உள்ளதோ அதற்கு ஏற்றாற்போல் அதனை பயன்படுத்திக்கொள்வேன்.

விளையாட்டுத்துறையில் உள்ளவர்கள் நல்ல உணவு அருந்த வேண்டும். பல்வேறு உபகரணங்களை வாங்க வேண்டும் என்று கூறுவார்கள். எங்கள் வீட்டில் என்ன சமைக்கிறார்களோ அதுதான் நல்ல சாப்பாடு. அம்மா கையில் சாப்பிடுவதுதான் என்னுடைய நல்ல சாப்பாடு. கடுமையான உழைப்பு இருந்தால் நிச்சயமாக அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும்.

கிரிக்கெட் வீரர் நடராஜன்

அது விளையாட்டாக இருந்தாலும் சரி படிப்பாக இருந்தாலும் சரி. நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் முயற்சியை விட மாட்டேன். எவ்வளவு துவண்டுபோனாலும் தன்னம்பிக்கை விட மாட்டேன். எவ்வளவு பெரிய உயர்வுக்குச் சென்றாலும் உங்களால் முடிந்த வழிகாட்டுதலை மற்றவருக்கு செய்யுங்கள்.” என்று மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசியிருக்கிறார் நடராஜன்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com