பட மூலாதாரம், Getty Images
மும்பை இந்தியன்ஸ் அணி இன்று நடந்த தனது கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக அற்புதமாக வெற்றி பெற்றாலும், ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லுமா என்ற பெரிய எதிர்பார்ப்பு தொக்கிக்கொண்டு இருக்கிறது.
வெற்றி நாயகர்கள்
பட மூலாதாரம், Getty Images
ஐபிஎல் தொடரில் கேமரூன் க்ரீனின் முதல் சதம், ஹிட்மேன் ரோஹித் சர்மா மீண்டும் ஃபார்முக்கு வந்து அரைசதம் அடித்தது போன்ற முத்தாய்ப்பான சம்பவங்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றுள்ளது.
மும்பை வான்ஹடைவில் இன்று நடந்த 69-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் சேர்த்தது.
201 ரன்கள் இலக்கைத் துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 108 பந்துகளில் 2 விக்கெட்டை இழந்து இலக்கை அடைந்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
கேமரூன் கிரீன் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை 47 பந்துகளில் பதிவு செய்தார். சிக்ஸர் மழை பொழிந்த கேமரூன், 100 ரன்களுடன்(8 சிக்ஸர், 8 பவுண்டரி) கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஃபார்முக்கு வந்த ரோஹித் சர்மா இந்த சீசனில் 2வது அரைசதம் அடித்து 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆனாலும் கொண்டாட முடியலேயே..!
மகத்தான வெற்றியாக இருந்தாலும், முழுமையாகக் கொண்டாட முடியாமல் மும்பை இந்தியன்ஸ் அணியினரும், ரசிகர்களும் தவிக்கிறார்கள்.
மும்பை இந்தியன்ஸ் மனதுக்குள் ஆர்சிபி-குஜராத் டைட்டன்ஸ் ஆட்டம் உருத்தலாகவே இருந்து வருகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணி லீக் ஆட்டத்தை முடித்த நிலையில் தற்போது 16 புள்ளிகளுடன் இருக்கிறது. மும்பை அணி வெற்றி பெற்றாலும் அதன் நிகர ரன்ரேட் இன்னும் மைனஸ் 0.044 என்ற அளவில் இருப்பது ரசிகர்களுக்கு கவலையைத் தருகிறது.
பெங்களூருவில் மழை தொடர்ந்து பெய்து ஆட்டம் ரத்தாகியிருந்தால், மும்பை இந்தியன்ஸ்க்கு கொண்டாட்டமான செய்தியாக மாறும். ஆனால், மழைநின்று ஆர்சிபி-குஜராத் ஆட்டம் தொடங்கிவிட்டது இதில் ஆர்சிபி-க்கு சாதாரண வெற்றிக் கிடைத்தாலே மும்பை இந்தியன்ஸ் வெளியேறிவிடும். ஏனென்றால், ஆர்சிபி நிகர ரன்ரேட்டில் பிளஸ் 0.180 என்று இருப்பதால், வெற்றிபெற்று 16 புள்ளிகள் வந்தாலே ப்ளே ஆப் சுற்றுக்குச் சென்றுவிடும்.
பட மூலாதாரம், Getty Images
வருணபகவான் உதவி செய்வாரா?
மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வது என்பது முழுமையாக அதிர்ஷ்டத்தால் மட்டும்தான் இருக்கும். மும்பை இந்தியன்ஸ் ப்ளே ஆஃப் செல்ல ஆர்சிபி விளையாடக் கூடாது, அல்லது குஜராத்திடம் தோற்க வேண்டும். இந்த சம்பவத்துக்காக மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் வருண பகவானிடம் வேண்டுவார்கள்.
அதேசமயம், மும்பை இந்தியன்ஸ் வெற்றியால், 14 புள்ளிகளோடு இலவு காத்த கிளியாக இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஏமாற்றத்தோடு தொடரிலிருந்து வெளியேறியது.
விவ்ராந்த், அகர்வால் அபார பேட்டிங்
அனைகின்ற விளக்கு பிரகாசமாக எரியும் என்பதைப் போல், கடைசி லீக் ஆட்டத்தில்தான் மயங்க் அகர்வால் இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தைப் பதிவு செய்தார். அறிமுக வீரரான விவ்ராந்த் அற்புதமான அரைசதம் அடித்தார். இருவரின் பங்களிப்புதான் சன்ரைசர்ஸ் அணி பெரியஸ்கோரை எட்ட காரணமாக அமைந்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இருவரும் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை வெளுத்துவாங்கி பதம் பார்த்தனர். பவரப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்தனர். ஓவருக்கு 10 ரன்ரேட்டில் சென்ற சன்ரைசர்ஸ் 6 ஓவர்களில் 50 ரன்களை எட்டியதால், நல்ல ஸ்கோரை இலக்காக வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
பியூஷ் சாவ்லா, கார்த்திகேயா, ஜோர்டான், மத்வால் பந்துவீச்சை இருவரும் துவம் செய்து பவுண்டரி, சிக்ஸர்களாக அனுப்பினர்.
விவ்ராந்த் சர்மா 36 பந்துகளில் அரைசதத்தையும், மயங்க் அகர்வால் 32 பந்துகளில் அரைசதத்தையும் நிறைவு செய்தனர். இருவரின் ஆட்டத்தால் 11 ஓவர்களில் 100 ரன்களை சன்ரைசர்ஸ் எட்டியது. இருவரையும் பிரிக்க ரோஹித் சர்மா பல பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் பலன் இல்லை.
14வது ஓவரில் மத்வால் பந்துவீச்சில் விவ்ராந்த் சர்மா விக்கெட்டை இழந்தார். விவ்ராந்த் சர்மா 47 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து(9பவுண்டரி, 2சிக்ஸர்) ஆட்டமிழந்தார். ஐபிஎல் வரலாற்றில் இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் அறிமுக ஆட்டத்திலேயே அதிகபட்ச ரன்கள் சேர்த்தது இதுதான் முதல்முறையாகும்.
அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்த இருவரும் முதல் விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த கிளாசன், அகர்வாலுடன் சேர்ந்து சில பவுண்டரிகளை விளாசினார்.
சதத்தை நோக்கி நகர்ந்த அகர்வால் 83ரன்களில்(46பந்துகள், 4சிக்ஸர்கள், 8பவுண்டரிகல்) மத்வால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அகர்வால் ஆட்டமிழந்தபின் அடுத்துவந்த எந்த பேட்ஸ்மேனும் நிலைக்கவில்லை.
பட மூலாதாரம், Getty Images
ப்ரூக், பிலிப்ஸ் ஏமாற்றம்
கிளென் பிலிப்ஸ் ஒரு ரன்னில் வெளியேறினார். இந்த சீசனில் இதுவரை பிலிப்ஸ் ஒருபோட்டியில்கூட உருப்படியான ஸ்கோர் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சன்ரைசர்ஸ் நம்பிக்கை நாயகன், ஒன்மேன் ஹீரோ கிளாசன் 18 ரன்னில் மத்வால் பந்துவீச்சில் போல்டாகி ஏமாற்றம் அளித்தார். ஹேரி ப்ரூக் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். ஹேரி ப்ரூக்கிற்கு பூஜ்ஜியம் மிகவும் பிடிக்குமா என்பது தெரியவில்லை, இந்த சீசனில் ஒரு சதம் அடித்ததைத் தவிர பெரும்பாலான போட்டிகளில் ப்ரூக் டக்அவுட்டிலேயே ஆட்டமிழந்துள்ளார்.
174 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த சன்ரைசர்ஸ் அணி, அடுத்த 26 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. சன்ரைசர்ஸ் அணி டெத் ஓவர்களை மோசமாகப் பயன்படுத்தியது.
கடைசி 3 ஓவர்களில் எந்த பவுண்டரியையும் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் அடிக்கவில்லை. கடைசி 4 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 32 ரன்கள் மட்டுமே சேர்த்தது, தொடக்கத்தில் நல்ல ஸ்கோர் செய்திருந்ததால் சன்ரைசர்ஸ் தப்பித்தது. இல்லாவிட்டால் ஸ்கோர் 150 ரன்களுக்குள் இருந்திருக்கும்.களத்தில் அனுபவமிக்கபேட்ஸ்மேன் மார்க்ரம் இருந்தும் பெரிய ஷாட்கள் ஏதும் அடிக்கவில்லை. மார்க்ரம் 13 ரன்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
200 ரன்களைக் கடக்க முடியவில்லை
தோல்விக்குப்பின் சன்ரைசர்ஸ் கேப்டன் மார்க்ரம் கூறுகையில் “ நல்ல தொடக்கம் அளித்தும் எங்களால் 200 ரன்களைக் கடக்கமுடியவில்லை. எங்கள் வீரர்கள் கடுமையாக வென்றும் இறுதியில் ரன்சேர்ப்பு வேகம் குறைந்தது. எங்களுக்கு இருந்த அழுத்தம் மிகஅதிகம், இந்தத் தொடரில் அதிகமாக கற்றுக்கொண்டோம். விவ்ராந்த் அறிமுகப் போட்டியில் சிறப்பாக ஆடினார். கிளாசன், புவனேஷ்வர் தொடர் முழுவதும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது சிறப்பு” எனத் தெரிவித்தார்
மும்பை கண்டுபிடித்த ‘முத்து’ மத்வால்
மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் ஏலத்தில் சில ஜாக்பாட்களை அடித்துள்ளது. இளம் வீரர்களை மிகக்குறைவாக ரூ.20 லட்சத்துக்கு வாங்கிப் போட்டது, ஆனால், அவர்களின் திறமை ஈட்டிக் கொடுத்த வெற்றி, மும்பையை ப்ளே ஆஃப் சுற்றுவரை அழைத்துவந்துள்ளது.
அதில் நேஹல் வதேரா, ஆகாஷ் மத்வால் ஆகியோரும் ரூ.50லட்சத்துக்கு வாங்கப்பட்ட பியூஷ் சாவ்லாவும் மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளனர்.
ஆகாஷ் மத்வாலின் இன்றைய பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. கிளாசனை ஆட்டமிழக்கச் செய்த பந்து பிரமாதமான பந்துவீச்சு. மத்வால் வீசிய பந்து, லேசான இன்ஸ்விங்குடன் கிளாசன் கால் இடுக்கில் புகுந்து ஸ்டெம்பை பதம் பார்த்ததை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
மத்வால் வீசிய 17-வது ஓவரில் 6 ரன்கள் கொடுத்து அகர்வால் விக்கெட்டையும், 19வது ஓவரை வீசிய மத்வால், கிளாசன், ப்ரூக் விக்கெட்டையும் வீழ்த்தினார். இன்றைய ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 37 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை மத்வால் கைப்பற்றினார்.
இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் கண்டுபிடித்த முத்து என்றால் அது மத்வால், வதேராதான். இருவரும் எதிர்காலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிய சொத்தாக மாறுவார்கள். பிசிசிஐ நிர்வாகத்தாலும் இருவரின் ஆட்டமும் கவனிக்கப்படும்.
ஃபார்முக்கு வந்த ரோஹித் சர்மா
பட மூலாதாரம், Getty Images
201 ரன்கள் இலக்கை துரத்தி ரோஹித் சர்மா, இஷான் கிஷன் களமிறங்கினர். இஷான் கிஷன் 14 ரன்னில் புவனேஷ்வர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். மிக முக்கியமான ஆட்டம் என்பதால் கேப்டன் ரோஹித் சர்மா மிகுந்த நிதானமாகவும், ஷாட்களை கவனத்துடன் ஆடினார்.
தன்னை நிலைப்படுத்தியபின், ரோஹித் சர்மா பழைய ஹிட்மேனாக உருவெடுத்து, பந்துகளை பவுண்டரி, சிக்ஸர்களுக்குப் பறக்கவிட்டார். 3வது வீரராகக் களமிறங்கிய கேமரூன் க்ரீன், களத்துக்குவந்தது முதல் பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசினார். கிரீன் தான் சந்தித்த முதல் 10 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள் விளாசி ராக்கெட் வேகத்தில் ரன்ரேட்டை உயர்த்தினார். 20 பந்துகளில் கிரீன் அரைசதம் அடித்தார்.
பவர்ப்ளேயில் மும்பை இந்தியன்ஸ் ஒரு விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்து 10 ரன்ரேட்டில் நடைபோட்டது. ரோஹித் சர்மாவை ஆட்டமிழக்கச் செய்ய இன்று இரு கேட்ச் வாய்ப்புகள் கிடைத்தும் அதை சன்ரைசர்ஸ் வீரர்கள் கோட்டைவிட்டனர். கேட்சை கோட்டைவிட்டதற்கு மிகப்பெரிய விலையும் சன்ரைசர்ஸ் அணி கொடுத்தது.
ஹிட்மேன் மைல்கல்
ரோஹித் சர்மா ஃபார்முக்கு வந்துவிட்டால் மதம்பிடித்தயானை என்பதை இன்றைய ஆட்டத்திலும் வெளிப்படுத்தினார். உம்ரான் மாலிக், கார்த்திக் தியாகி ஓவர்களை வெளுத்து வாங்கிய ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் 11 ஆயிரம் ரன்களை எட்டி சாதனை படைத்தார். அதுமட்டுமல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டும் 5ஆயிரம் ரன்களை ரோஹித் சர்மா அடித்து மைல்கல்லை எட்டினார்.
பேட்ஸ்மேன்களின் சொர்க்கம்
பட மூலாதாரம், Getty Images
அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 31 பந்துகளில் அரைசதம் அடித்தார். ரோஹித் சர்மாவை ஃபார்முக்கு கொண்டுவந்த பெருமை சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களையே சேரும். இந்த சீசன் முழுவதும் ஒருஅரைசதத்தோடு, விரைவாக ஆட்டமிழந்து ஃபார்மில்லாமல் தவித்த ரோஹித் சர்மாவை மீண்டும் உசுப்பேற்றிவிட்டனர்.
பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான வான்ஹடே ஆடுகளத்தில் லைன்,லென்த்தை தவறவிடும் பந்துவீச்சாளர்கள் நிலைமை அதோகதிதான். பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கி, பந்துவீச்சாளர்களின் நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்துவிடுவார்கள். அதுதான் இன்றைக்கு சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களுக்கும் நேர்ந்தது.
ரோஹித் சர்மாவை(56ரன்கள், 8 பவுண்டரி,ஒருசிக்ஸர்) ஆட்டமிழக்கச் செய்ய போராடிய நிலையில் தாகர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 2வது விக்கெட்டுக்கு கேமரூன், ரோஹித் கூட்டணி 128 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.
அடுத்துவந்த 360 டிகிரி வீரர் சூர்யகுமார் யாதவ், கேமரூனுடன் சேர்ந்தார். ஒரு காலத்தி்ல சச்சின் டெண்டுல்கருக்கு வான்ஹடே மைதானத்தில் இருந்த வரவேற்பைப் போல் சூர்யகுமார் களமிறங்கியபோது, சூர்யா, சூர்யா என்ற கோஷத்தால் அரங்கம் அதிர வரவேற்புக் கிடைத்தது.
கேமரூன் முதல் சதம்
வெற்றிக்கு 30 பந்துகளில் 41 ரன்கள் தேவைப்பட்டது. உம்ரான் மாலிக் வீசிய 16-வது ஓவரில் கேமரூன், சூர்யா இருவரும் பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசி 20 ரன்களைச் சேர்த்தனர். இதன் மூலம் 24 பந்துகளில் வெற்றிக்கு 21 ரன்களாகக் குறைந்தது.
சூர்யகுமார் வழக்கம்போல் தனது வித்தியாசமான ஷாட்களால் பவுண்டரி விளாசினார். கேமரூன் கிரீன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 47 பந்துகளில் ஐபிஎல் தொடரில் முதல் சதத்தைப் பதிவு செய்தார். கேமரூன் 100 ரன்களிலும்(8சிக்ஸர்,8பவுண்டரி), சூர்யகுமார் 25ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
நம்பிக்கையோடு இருக்கிறோம்
வெற்றிக்குப்பின் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “ வெற்றி பெற வேண்டும் என்ற மனதுடன் களத்துக்கு வந்தோம், என்ன நடந்தாலும் கவலைப்படமாட்டோம். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நம்பினோம். எங்களின் சிறப்பான ஆட்டத்துக்கு வீரர்களே காரணம்.
இந்த சீசனில் நாங்கள் தொடக்கத்தில் சரியாக விளையாடவில்லை, இருப்பினும் கடைசியில் நாங்கள் நினைத்ததுபோல் முடிவுகள் கிடைத்தன. கடந்துவந்த பாதையைத் திருப்பிப் பார்த்தால் பல முக்கிய தருணங்களை இழந்திருப்போம்.
குறிப்பாக பஞ்சாப், லக்னெள அணிக்கு எதிரான ஆட்டங்களில் வெற்றியைத் தவறவிட்டோம். இருப்பினும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எது நடந்தாலும் நாங்களே பொறுப்பேற்போம். ப்ளே ஆப் சென்றால் அதற்கு வீரர்களே உரித்தானவர்கள்” எனத் தெரிவித்தார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: