2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் தங்கம், 2020ம் ஆண்டு டோக்கிய ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவர், தற்போது 2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்று ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் அடித்திருக்கிறார். இப்படியொரு சாதனையை பாராலிம்பிக்ஸில் இதற்கு முன் வேறு எந்த இந்திய வீரரும் செய்ததில்லை. இந்நிலையில் இன்று பாரிஸ் பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்று தமிழ்நாடு திரும்பியிருக்கும் பாராலிம்பிக் நாயகன் மாரியப்பன் தங்கவேலுவிற்கு வரவேற்பும், வாழ்த்துகளும் குவிந்துள்ளன.
இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன், “மூன்று முறை தொடர்ச்சியாக பாராலிம்பிக்கில் பங்கேற்று தங்கம், வெள்ளி மற்றும் இந்தமுறை வெண்கலம் வென்றிருக்கிறேன். இந்த பாரிஸ் பாராலிம்பிக் தங்கம் வெல்ல வேண்டும் என்ற கனவுடன்தான் பங்கேற்றேன். ஆனால், அங்கிருக்கும் காலநிலை என் உடலுக்கு ஒத்துக் கொள்ளாததால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். அதனால், தங்கம் வெல்ல வேண்டிய வாய்ப்பைத் தவறவிட்டு வெண்கலம் வென்றிருக்கிறேன். இது சிறு வருத்தத்தை ஏற்படித்தினாலும், வெண்கலம் வென்றதில் மகிழ்ச்சி. அடுத்த முறை நிச்சயம் தங்கம் வெல்லுவேன்.