விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு ஆண்டுதோறும் கேல் ரத்னா விருது வழங்கி வருகிறது. இந்த நிலையில், விளையாட்டுத் துறையின் உயரிய விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியானது. அதில், ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் மற்றும் டிராக்-ஃப்ளிக்கர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரிஸ் பாராலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற பிரவீன் குமார் ஆகியோர் பெயர் மட்டுமே இடம்பெற்றிருக்கிறது. பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இரண்டு பதக்கங்கள் வென்ற மனு பக்கரின் பெயர் இடம்பெறவில்லை. அதனால் இந்த விவகாரம் பெரும் பேசுபொருளானது.
அதைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்ரமணியன் தலைமையில், முன்னாள் மகளிர் ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால், குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், கிரிக்கெட் ஜாம்பவான் அனில் கும்ப்ளே உள்ளிட்டோர் இடம்பெற்ற 12 பேர் கொண்ட விருதுகள் குழுவினரும், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகமும் கடுமையான விமர்சனங்களை எதிர்க்கொண்டன. இதற்கிடையில், அமைச்சக அதிகாரி ஒருவர், “இது இறுதிப்பட்டியல் அல்ல, இன்னும் சில நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். மனு பக்கரின் பெயர் இதில் சேர்க்கப்படலாம்” என விளக்களித்தார்.