இருபதுகளில் இருப்பவர்கள்கூட `எனக்கு லோ பிபி இருக்கு’ என்கிறார்கள். லோ பிபி என்கிற குறை ரத்த அழுத்தம் என்றால் என்ன, காரணங்கள், தீர்வுகள் மற்றும் ஆரோக்கியமான ரத்த அழுத்தத்தின் அளவு என்ன என்பனகுறித்து சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலத்திடம் கேட்டோம்.
ரத்த அழுத்தத்தின் அளவுகள் !
“சரியான ரத்த அழுத்தம் என்றால், அது 120/80 தான் என்று பள்ளிக்காலத்திலிருந்து படித்து வருகிறோம். அதனுடன் இவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள். 160/70-ம் நார்மல் ரத்த அழுத்தம்தான். 90/70-ம் நார்மல் ரத்த அழுத்தம்தான். 90/60 அல்லது இதற்குக் கீழே இறங்கும்போதுதான், அதை குறை ரத்த அழுத்தம் என்கிறோம். மருத்துவர்கள் ஹைப்போ டென்ஷன் என்று சொல்வோம்.

அறிகுறிகள் என்னென்ன ?
குனிந்து நிமிரும்போது அல்லது உட்கார்ந்து எழுந்திருக்கும்போது அல்லது தூங்கி எழுந்து நிற்கும்போது தலைச்சுற்றல் ஏற்படுவது, மயக்கம் வருவது, இதயத்துடிப்பு அதிகரிப்பது…
நன்றாக உறங்குகிறீர்களா ?
சிலநாள் தூக்கம் குறைந்தால் உடல் ஏற்றுக்கொள்ளும். ஆனால், தினமும் தூக்கம் குறைந்தால் குறை ரத்த அழுத்தம் வரலாம். இப்படிப்பட்டவர்களுக்குத் தீர்வு ஆழ்ந்த தூக்கம்தான்.
நாள் முழுக்க வெயிலில் சுற்றுகிறீர்களா ?
வேலை காரணமாக நாள் முழுக்க வெயிலில் சுற்றுவார்கள். வியர்த்து வழியும். வேலைப்பளுவில் தண்ணீர் குடிக்கவும் மறந்து விடுவார்கள். விளைவு, உடம்பில் நீர்ச்சத்தும் உப்புச்சத்தும் குறைந்து ரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் வரலாம். சமீபத்தில்கூட 52 வயது பெண்மணி ஒருவர், லோ பிபி காரணமாக, மாடியில் வேலை செய்து கொண்டிருக்கையில் தவறி விழுந்து கிரில் கேட்டில் சிக்கி ஒரு கையை இழந்தார். நடுத்தர வயதில் இருப்பவர்களும், வயதானவர்களும் இதுபோன்ற சூழலைத் தவிர்ப்பதுதான் நல்லது.

கர்ப்பமாக இருக்கிறீர்களா ?
கர்ப்பமாக இருக்கையில் அடிக்கடி வாந்தி எடுப்பதால் நீரிழப்பு ஏற்பட்டாலோ, ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தாலோ குறை ரத்த அழுத்தம் வரலாம். இதனால்தான், கர்ப்பிணிகளுக்கு ‘வாந்தி வந்தாலும் பழச்சாறு, இளநீர் போன்றவற்றை தினமும் அருந்துங்கள்’ என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
சில தீர்வுகள் !
தூங்கி எழும்போது மயக்கம் வந்தால், உடனடியாக மருத்துவரைப் பாருங்கள். இப்படிப்பட்டவர்கள், படுக்கையிலிருந்து எழுந்து சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு அதன் பிறகு எழுந்து நடக்கலாம்.
குளியலறையில் இருக்கையில் மயக்கம் வந்தால், பதறாமல் அப்படியே சிறிது நேரம் உட்கார்ந்து விடுங்கள்.

குறை ரத்த அழுத்தம் இருப்பது உறுதியானால், வெளியே செல்லும்போது ஓ.ஆர்.எஸ் கலந்த நீர் அல்லது உப்பு போட்ட நீர்மோரை எப்போதும் உடன் வைத்திருங்கள். ‘குளுக்கோஸ் ஏற்ற வேண்டும்’ என்று டாக்டர் சொன்னால் மட்டும், ஏற்றிக் கொள்ளுங்கள். ரத்த அழுத்த அளவை வீட்டிலேயே பரிசோதித்துக் கொண்டாலும், அந்த நம்பரை மருத்துவரிடம் தெரிவித்து ஆலோசனை கேளுங்கள். இதுவொரு நோய் கிடையாது. மருத்துவரின் ஆலோசனைகளைப் பின்பற்றி கவனமாக இருந்தாலே போதும்” என்கிறார் பொது மருத்துவர் அருணாசலம்.