இந்தாண்டு மலையாளத்தில் வெளியான சிறந்த த்ரில்லர் படங்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது `கிஷ்கிந்தா காண்டம்’.
கோலிவுட், டோலிவுட் என அத்தனை இடங்களிலும் கவனம் பெற்றிருக்கிறது இந்த மாலிவுட் படைப்பு. இயக்குநர் டின்ஜித் அயத்தன் இயக்கத்தில் உருவாகியிருக்கிற இத்திரைப்படம் பலருக்கும் ஃபேவரைட்டானதுக்கு முக்கிய காரணமே இப்படம் பின்பற்றிய புதிய வடிவிலான த்ரில்லர் ஃபார்முலாதான். அல்சைமர் குறைபாட்டை சார்ந்த பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் அந்த லிஸ்டிலிருந்து தனித்து நிற்கிறது இந்தப் படைப்பு. `கிஷ்கிந்தா காண்டம்’ பிரமாண்ட வெற்றிக்கு இயக்குநர் டின்ஜித்துக்கு வாழ்த்துகளை கூறி பேசினோம். கேள்விகளுக்கு தமிழிலேயே பதிலளிக்கத் தொடங்கியவர்….
உங்களுடைய முதல் திரைப்படமான `கக்ஷி: அம்மிணிபிள்ளா’ திரைப்படத்தை முடிச்சு 5 வருடத்திற்குப் பிறகு அடுத்தப் படத்தை எடுத்து வெளியிட்டிருக்கீங்க! ஏன் இந்த இடைவெளி?
என்னுடைய முதல் திரைப்படத்தை முடிச்சதும் கோவிட் வந்துருச்சு. அந்த நேரத்திலும் சில கதைகளில் நான் வொர்க் செஞ்சுப் பார்த்தேன். அதன் பிறகு இந்தப் படத்தினுடைய எழுத்தாளர் பாகுல் ரமேஷ் இந்தக் கதையை என்கிட்ட சொன்னார். இந்தக் கதையைக் கேட்டு முடிச்சதும் எனக்கு ஒரு கிக் வந்துடுச்சு. இந்த கதையை உறுதியாக திரைப்படமாக பண்ணிடனும் தெளிவாக இருந்தேன். அப்புறம் 8 நாள்கள்ல இந்த கதையோட முதல் டிராஃப்ட்டை பாகுல் முடிச்சிட்டார். இந்தக் கதையை ரொம்பவே சரியாக படம் பண்ணனும்னு நினைச்சோம். கோவிட் நேரத்துல மக்கள் அதிகளவிலான கண்டென்ட் திரைப்படங்கள் பார்த்து முதிர்ச்சியடைஞ்சிட்டாங்க. அந்த சர்வதேசப் படங்களைப் பார்த்துப் பிறகு இங்க வர்ற படங்கள்ல ஒரு விஷயம் எதிர்பார்க்கிறாங்க. அதை உறுதியாக பூர்த்தி பண்ணிடனும்னு திட்டவட்டமாக இருந்தோம். வெறும் சாதரணமான கன்டென்ட்டாக இதை கொடுத்திடக்கூடாதுனு வேலைகளை கவனிச்சோம்.
குரங்குகள் கதையில முக்கியமான பங்கு வகிக்கிதுனு படத்துக்கு `கிஷ்கிந்தா காண்டம்’னு பெயர் வச்சீங்களா?
உண்மையை சொல்லணும்னா, கதையினுடைய முதல் டிராப்ட்ல குரங்கள் இல்லை. அதன் பிறகுதான் இந்த கதையில குரங்குகள் இருந்தால் நல்ல இருக்கும்னு நினைச்சு சேர்த்தோம். குரங்குகள் அதிகமாக இருக்கும் பகுதி பற்றி ராமாயணத்துல கேள்விபட்டிருப்போம். அந்தப் பகுதிதான் கிஷ்கிந்தம். இந்த வார்த்தையோட `காண்டம்’ என்கிற வார்த்தையை சேர்த்துக் கொண்டால் சரியாக இருக்கும்னு முடிவு பண்ணினோம். முதல்ல படத்துக்கு `Curious case of Appu Pilla’னு தான் டைட்டில் வச்சிருந்தோம். அப்புறம் சில யோசனைகளும் வந்தது. இந்த தலைப்பை வச்சா கண்டிப்பாக பார்வையாளர்களுடைய முழு கவனமும் அப்பு பிள்ளா கதாபாத்திரத்துக்கு போயிடும். அப்படி இருந்தால் அந்த கதாபாத்திரத்திற்குள்ள ஒளிச்சு வச்சிருக்கிற விஷயங்களை மக்கள் யூகிச்சிடுவாங்க. இந்த விஷயங்களுக்காக தலைப்பை மாத்திட்டோம்.
மலையாள சினிமாவுல த்ரில்லர் படங்கள் பண்றது எவ்வளவு சவாலான ஒன்றாக இருக்கு ?
இப்படியான சவால் எழும்போது அதற்கேற்ப சில விஷயங்களை நாம் மாற்றியமைக்கணும். க்ளிஷே காட்சிகள் தொடர்வதை தவிர்க்க வேண்டியது முதல் புள்ளினு தெரிஞ்சுகிட்டு, த்ரில்லர் படங்களில் தொடரும் க்ளிஷேகளை கட் பண்ணினோம். சொல்லப்போனால், இந்த ஃபார்முலாவை வசனத்திலும் பின்பற்றினோம். த்ரில்லர் படத்துல போலீஸ் முக்கியமான கதாபாத்திரமாக இருப்பாங்க. இந்த கதையில அப்படி இருக்ககூடாதுனு யோசித்து பண்ணினோம். போலீஸ் இருப்பாங்க. ஆனால், முக்கியமான ரோல் இருக்காது. அதே சமயம், அந்த காட்சிகள்ல காவல் அதிகாரிகள் யூனிஃபார்ம்லகூட இருக்கமாட்டாங்க. க்ளிஷே வடிவிலான வழக்கத்தை மக்களுக்கு தொடர்ந்து காட்டும்போது அவர்களுக்கே போர் அடிச்சிடும். அல்சைமர் குறைபாட்டை மையப்படுத்தி திரைப்படங்கள் பலவற்றை வந்திடுச்சு. அதுனால அந்த விஷயத்திலும் புதியதாக யோசிக்க வேண்டியது இருந்தது. இந்தப் படத்தோட வேலைகளை தொடங்கும்போது அல்சைமர் தொடர்பான படங்களைப் பார்க்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். அந்தப் படங்களை நான் பார்த்தால் அதனுடைய தாக்கம் எனக்குள்ள முழுமையாக வந்திடும். அதுனால தவிர்த்தேன். சில நபர் இந்தப் படம் கிறிஸ்டோபர் நோலனுடைய `மொமன்டோ’ திரைப்படம் மாதிரியே இருக்குனு சொன்னாங்க. ஆனால், அந்த படத்தோட தாக்கம் எனக்கு எழுதும்போது இல்ல. அந்தப் படத்தை நான் ரொம்ப முன்னாடியே பார்த்திருந்தேன். ஸ்கிரிப்ட் எழுதிட்டு திரும்ப படிக்கும்போது நான் `இன்டர்ஸ்டெல்லர்’ திரைப்படத்தோட இசையை கேட்டுகிட்டேதான் படிச்சேன். அந்த இசை ஒரு உலகத்தை உருவாக்கும். அந்த உலகத்திற்குச் செல்வதற்கு இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மரினுடைய இந்த இசை வழியமைச்சுக் கொடுக்கும்.
இரண்டு படங்கள் பண்ணிட்டீங்க…ரெண்டு படத்துக்கும் ஒரு ஹீரோதான். ஆசிஃப் அலியுடனான நட்பு பற்றி சொல்லுங்க?
என்னுடைய `கக்ஷி: அம்மினிபிள்ளா’ திரைப்படம் பண்றதுக்கு முன்னாடியே நான் ஒரு கதையை முதல் படமாக பண்ணனும்னு வச்சிருந்தேன். அந்தக் கதையை ஆசிஃப் அலிகிட்ட சொன்னேன். ஆனா, அந்த திரைப்படம் டேக் ஆஃப் ஆகல. பிறகு, என்னுடைய நண்பன் வாழ்க்கைல நடந்த ஒரு விஷயத்தை மையமாக வச்சு படம் பண்ணலாம்னு யோசித்தேன். என் நண்பன் வாழ்க்கைல நடந்த உண்மை சம்பவம்தான் என்னுடைய முதல் திரைப்படமான `கக்ஷி அம்மினிபிள்ளா’. `கிஷ்கிந்தா காண்டம்’ கதையை முடிச்சதும் முதன்மை கதாபாத்திரத்துக்கு ஆசிஃப் சரியாக இருப்பார்னு எனக்கு தோணுச்சு. இந்த கதாபாத்திரமும் அதற்குள்ள அடங்கியிருக்கிற எமோஷன்களும் ரொம்ப வித்தியாசமானது. அதற்கேற்ப சரியாக பொருந்தியிருக்கிறார் ஆசிஃப்.
படத்துல முக்கியமான ஒரு கதாபாத்திரத்துல நிழல்கள் ரவியை நடிக்க வச்சிருந்தீங்க? அவருடைய குறிப்பிட்ட எதாவது ஒரு கதாபாத்திரம் உங்களை இன்ஸ்பயர் பண்ணியதுதான் அவரை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்ததற்கு காரணமா?
அப்படி திட்டமிட்டது இல்லை. நிழல்கள் ரவி சார் மாதிரியானவர் இந்த கதாபாத்திரத்துல நடிச்சா நல்லா இருக்கும்னு நான் யோசித்தேன். அவர் நடிச்ச கதாபாத்திரம் கொஞ்ச நேரம்தான் படத்துல வரும். ஆனா, அதனுடைய தாக்கம் படத்துக்கு மிகவும் முக்கியம். அதுனால அந்தக் கேரக்டருக்கு பலரையும் தேடினோம். ஜெயிலர் படத்துல சிவாராஜ்குமார் சார் கதாபாத்திரம் ஏற்படுத்தின மாதிரியான தாக்கத்தை இந்தக் கதாபாத்திரமும் ஏற்படுத்தணும் பிளான் பண்ணினோம். அப்புறம் பல யோசனைகளுக்குப் பிறகு நிழல்கள் ரவி சாரை தேர்ந்தெடுத்து நடிக்க வச்சோம்.
அப்பு பிள்ளா எப்போதும் டென்ஷனாக இருக்கிற கதாபாத்திரமும். ஆனால், தந்தை என்னதான் கோபப்பட்டாலும் அஜயனுக்கு அவர் மேல துளிக்கூட எங்கையும் கோபம் வராது. இந்த விஷயம் அப்பு பிள்ளா கதாபாத்திரத்துல இருக்கிற டிவிஸ்ட்டை ஆடியன்ஸுக்கு முன்பே கணிக்க வச்சிடும்னு யோசித்தீங்களா?
ஆமா, நீங்க சொல்ற மாதிரி தெளிவாக காட்டியிருந்தால் அப்பு பிள்ளா கதாபாத்திரத்துல ஏதோ டிவிஸ்ட் இருக்குனு பார்வையாளர்களுக்கு முன்பே தெரிய வந்திடும். அந்த தருணத்துல பார்வையாளர்களை திசை திருப்ப சில யுக்திகளை கையாண்டோம். அபர்ணா சொல்ற ஒவ்வொரு விஷயத்துக்கு அஜயன் உண்மை தெரிந்தாலும் வெவ்வேறு வடிவுல ரியாக்ட் பண்ணுனும்னு பிளான் போட்டோம். திட்டமிட்டபடி இந்த செயல்களை நாங்க திரையில சரியாக பண்ணிட்டால் பார்வையாளர்களுக்கு அப்பு பிள்ளா கதாபாத்திரம் மேல முழு கவனமும் போகாதுனு நினைச்சோம். நினைச்சதை சரியாக பண்ணிட்டோம்னு இப்போ நினைக்கிறேன்.
படத்துல சாச்சுவோட உடல் எங்க புதைக்கப்பட்டதுனு அப்பு பிள்ளா மறத்திடுவார். அந்த இடம் ஆசிஃப் அலிக்கு கடைசி வரைக்கும் தெரியாது. பார்வையாளர்களுக்கு அதை தெரியப்படுத்தாமல் படத்தை முடிச்சிட்டீங்க. இந்த வகையில அடியன்ஸ் எதிர்பார்ப்பு மீட்டரிலிருந்து விலகி வேற ஒரு முடிவைக் கொடுக்கலாம்னு எதனால யோசிச்சீங்க?
அப்படி நான் சாச்சுவோட உடல் இருக்கிற இடத்தைக் காட்டியிருந்தால் படத்தோட தனித்தன்மையே அழிந்துப் போயிருக்கும். படத்தோட தயாரிப்பு நிறுவனம்கூட சாச்சுவோட உடலை காட்டலாம்னு சொன்னாங்க. ஆனா நான் அதை விரும்பல. பார்வையாளர்களோட எதிர்பார்ப்பு வேற. அதை மீறி வேற ஒண்ணு பண்ணனும்னு திட்டம். அந்த உடல் பற்றின விஷயங்கள் அப்பு பிள்ளாவுக்கு மட்டும்தான் தெரியும். அவரும் அந்த விவரங்களையெல்லாம் மறந்துட்டாரு. சொல்லப்போனால், படத்தினுடைய கதாசிரியர்களுக்குகூட சாச்சுவோட உடல் எங்க புதைக்கப்பட்டிருக்குனு தெரியாது (சிரிக்கிறார்).
கோலிவுட்ல யாருடைய வேலைகள் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்?
அப்போதும், இப்போதும், எப்போதும் மணி ரத்னம் சார்தான் என்னுடைய ஃபேவரைட். அதன் பிறகு வெற்றிமாறன், மிஷ்கின் போன்ற இயக்குநர்களோட வேலைகளும் எனக்கு ரொம்ப பிடிக்கும். நடிகர்களாக எனக்கு சீயான் விக்ரம், கமல்ஹாசன், சூர்யானு பலரையும் பிடிக்கும். கமல் சாரை பார்த்திடணும்னு முயற்சி பண்ணீட்டு இருக்கேன். நடந்தால் நல்லா இருக்கும்…
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…