கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம் தானூரைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சித்திக் (58) என்பவர் கொலைசெய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டு, ட்ராவல் பேக்கில் அடைக்கப்பட்டு அட்டப்பாடியில் வீசப்பட்ட வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வழக்கில் சித்திக்கின் ஹோட்டலில் வேலைசெய்த ஷிபிலி (22), ஃபர்ஹானா(19), ஆஷிக் ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
விசாரணையில் ஃபர்ஹானா, ஷிபிலி, ஆஷிக் ஆகிய மூவரும் சேர்ந்து திட்டமிட்டு, சித்திக்கைக் கொலைசெய்தது தெரியவந்திருக்கிறது. சித்திக்கின் நண்பரின் மகள்தான் பர்ஹானா. பர்ஹானா சித்திக்கிடம் பணம் பறிப்பதற்காக மிகவும் நெருக்கமாக பழகியிருக்கிறார். அவரிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் தன்னுடைய நண்பரான ஷிபிலி என்பவரைக் கடந்த 3-ம் தேதி சித்திக்கின் ஹோட்டலில் வேலைக்குச் சேர்த்துவிட்டிருக்கிறார். ஃபர்ஹானா சொன்னதன் அடிப்படையில் ஷிபிலியை சித்திக் வேலைக்குச் சேர்த்திருக்கிறார். ஆனால் ஷிபிலியின் நடவடிக்கை சரியில்லை என்பதால் கடந்த 18-ம் தேதி வேலையைவிட்டு நிறுத்தியிருக்கிறார் சித்திக். இதையடுத்து தனியாகச் சந்திக்க வேண்டும் என சித்திக்கிடம் கூறிய ஃபர்ஹானா, ஹோட்டலில் ரூம்போடச் சொல்லியிருக்கிறார்.
இதையடுத்து 18-ம் தேதியே 2 ரூம்களை தனது பெயரில் புக்செய்த சித்திக், முதலில் ஹோட்டலுக்குச் சென்றிருக்கிறார். தொடர்ந்து ஃபர்ஹானா சென்றிருக்கிறார். ஃபர்ஹானா அழைத்ததன் பேரில் ஷிபிலி, ஆஷிக் ஆகியோர் அங்கு சென்றிருக்கின்றனர். பர்ஹானா தனது அறையிலிருந்து சித்திக்கின் அறைக்குச் சென்ற சமயத்தில் ஷிபிலியும், ஆஷிக்கும் சென்றிருக்கின்றனர். சித்திக்கிடம் தொடர்ந்து பணம் பறிப்பதற்காக அவரை நிர்வாணப்படுத்தி போட்டோ எடுக்க முயன்றிருக்கின்றனர். ஆனால் சித்திக் அவர்களிடம் பிரச்னை செய்திருக்கிறார்.