“கடந்த 24 மணிநேரத்தில் பல விஷயங்கள் என்னைப் பற்றிக் கூறப்பட்டுவருகின்றன. அதனால் என்னுடைய தன்னிலை விளக்கத்தை நானே தருகிறேன். நான் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட்டை விட்டுவிட்டு செல்ல மாட்டேன். என் தேசத்துக்காக ஆடியதுதான் என் வாழ்வின் மிகச்சிறந்த தருணம். அந்தப் பெருமையை விட்டுத்தர மாட்டேன். இங்கிலாந்து அணிக்காக ஆடுவதுதான் எனக்கு முதன்மையானது.
MLC-ல் ஆடுவது குறித்து எனக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே ஆரோக்கியமான ஓர் உரையாடல் நடந்தது. ஒப்பந்தத்திலிருந்து விலகினால் நான் அங்கு ஆடுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றார்கள். சென்ட்ரல் கான்ட்ராக்ட் இல்லாத நான், இங்கிலாந்துக்குப் போட்டிகள் எதுவும் இல்லாத இந்த நேரத்தில் MLC போன்ற ஒரு லீக்கில் ஆடுவது ஒரு வீரராக எனக்குப் பல நன்மைகளைச் செய்யும். முன்பு சொன்னது போல இங்கிலாந்துக்காக ஆடுவதுதான் எனக்கு முக்கியம். அதுவும் உலகக்கோப்பை நெருங்கும் இந்தச் சமயத்தில் தேசத்திற்காக ஆட வேண்டும் என்றே நினைக்கிறேன்!” என்று அதில் கூறியிருந்தார் ராய்.
மாறிவரும் இந்தச் சூழலில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் ஒப்பந்தங்களை மாற்றியமைப்பதில் தீவிரம் காட்டிவருகிறதாம். இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற பணம் படைத்த கிரிக்கெட் வாரியங்கள் தங்களது முக்கிய வீரர்களை எப்படியாவது தக்கவைத்துவிடும். ஆனால், வெஸ்ட்இண்டீஸ், தென்னாப்பிரிக்கா போன்ற மற்ற கிரிக்கெட் வாரியங்களுக்கு அது பெரும் சவாலாகவே இருக்கப்போகிறது என்கிறார்கள் கிரிக்கெட் ஆர்வலர்கள்.