சேப்பாக்கத்தில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியடைந்திருக்கிறது இந்தியா. முதல் இன்னிங்ஸில் கோலி, ரோஹித் போன்ற அனுபவ வீரர்களே திணறிய நிலையில் ஜெய்ஸ்வால் ஒரு நல்ல இன்னிங்ஸை ஆடியிருந்தார். போட்டியை நேரில் கவர் செய்ய நான்கு நாள்களும் சென்றிருந்ததால் அவரின் ஆட்டத்தைத் தாண்டி சில விஷயங்களையும் கவனிக்க முடிந்தது.

நான்காம் நாளில் உணவு இடைவேளைக்கு முன்பாகவே போட்டி முடிந்துவிட்டது. காலையிலிருந்து ஜெய்ஸ்வாலும் கிட்டத்தட்ட 2 மணி நேரம் பீல்டிங் செய்திருந்தார். ஆனாலும் போட்டி முடிந்த அடுத்த 15 வது நிமிடத்தில் பிராக்டிஸ் ஜெர்சியை அணிந்து பேடை கட்டி வலையில் பேட்டிங் பயிற்சி செய்ய வந்துவிட்டார். போட்டிக்கு பிறகான பரிசளிப்பு நிகழ்வுகளெல்லாம் ஒரு பக்கம் நடக்க ஜெய்ஸ்வால் இன்னொரு பக்கம் தீவிரமாக ஷாட்களை ஆடி பயிற்சி செய்து கொண்டிருந்தார். ரசிகர்களெல்லாம் மைதானத்திலிருந்து கிளம்பிவிட்டார்கள். மற்ற வீரர்கள் ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் முகாமிட்டிருந்தனர். இவர் மட்டும் த்ரோ வீசுபவரை வைத்துக் கொண்டு ஒரு மணி நேரத்துக்கும் மேல் பயிற்சி செய்துகொண்டிருந்தார்.
இரண்டாம் இன்னிங்ஸில் அவுட் ஆகிவிட்ட போதும் இதையேத்தான் செய்திருந்தார். கில்லும் பண்ட்டும் பேட்டிங் ஆடிக்கொண்டிருக்கையில் இவர் மைதானத்துக்கு வெளியே இருக்கும் B க்ரவுண்ட்டில் தீவிரமாக பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஜெய்ஸ்வாலின் இந்த தீவிரம் ஒரு மாதிரியாக இனம்புரியாத உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுக்கிறது.
பானிபூரி விற்பவரின் மகனாக பிறந்து கடும் உழைப்பினால் திறமையை வளர்த்துக் கொண்டு முன்னேறியிருக்கிறார். 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட், ஐ.பி.எல் என ஆடி இப்போது இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடிக்க தீர்க்கமாக முயன்று வருகிறார்.

‘சீனியர்கள் அணியில் இருக்கும்போது வாய்ப்புக்காக இளைஞர்கள் கொஞ்சம் காத்திருக்கத்தான் வேண்டும்.’ என கம்பீர் பேசியிருந்தார். சர்ப்ராஸ் கான், துருவ் ஜூரேல் போன்ற வீரர்களை மனதில் வைத்து இப்படி பேசியிருந்தார்.
ஜெய்ஸ்வாலும் ஒரு இளம் வீரர்தான். இப்போதுதான் அவருக்கு டெஸ்ட் அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. கிடைக்கும் வாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்ள கடினமாக போராட வேண்டும் என்கிற புரிதல் அவருக்கு இருக்கிறது. 27 ஆம் தேதிதான் இந்தியாவுக்கு அடுத்த டெஸ்ட். ஓய்வெடுத்துவிட்டு மறுநாள் கூட பயிற்சியை தொடங்கலாம். ஆனால், ஜெய்ஸ்வால் ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். உழைப்பின் மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார். அதன் வெளிப்பாடாகத்தான் அவரின் தீவிரப் பயிற்சியை பார்க்க முடிந்தது.

நல்லபடியாக தன்னுடைய கரியரை தொடங்கியிருக்கிறார். உச்சபட்ச வீரராக உயர வேண்டும் என்கிற கனவை கொண்டிருக்கிறார். அதற்கான வேட்கையும் அவரிடம் இருக்கிறது.