“இஸ்ரேலை தாக்குவதை விட எங்களுக்கு அமெரிக்காவை தாக்குவது எளிது’ என ஈரான் முன்னரே அமெரிக்காவை எச்சரித்திருந்தது. அதற்கு அடிப்படைக் காரணம் அமெரிக்க ராணுவத்தின் மிக முக்கியமான சொத்தாகக் கருதப்படும் அல்-உதய் விமான நிலையம். ஈரான் மீதான் தாக்குதலுக்கு பதிலடியாகதான் இந்த விமான நிலையத்தை சரமாரியாக தாக்கியிருக்கிறது ஈரான்.
இது தொடர்பாக ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கத்தாரில் இருக்கும் அமெரிக்க ராணுவ தளத்தின் மீதான தாக்குதல் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கை, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலில் அமெரிக்கா பயன்படுத்திய குண்டுகளின் எண்ணிக்கைக்கு சமம். நாங்கள் இலக்கு வைத்த தளம் கத்தாரில் உள்ள நகர்ப்புறங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளது. அதனால், பொதுமக்களுக்கான ஆபத்து குறைவுதான்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
இந்தத் தாக்குதல் ஈரானிய இராணுவத்தின் சித்தாந்தப் பிரிவான புரட்சிகர காவல்படையினரால் நடத்தப்பட்டதாக ஈரானின் ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.