IPL Retention : 'அந்த 3 வீரர்களுக்கு மட்டும் 65 கோடி' – அதிக சம்பளம் வாங்கப்போகும் டாப் 3 வீரர்கள்

Share

ஐ.பி.எல் மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கப் போகும் வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட்டிருக்கின்றன. இதில், ஒரு மூன்று வீரர்கள் மட்டும் எதிர்பார்த்ததை விட மிக அதிக விலை கொடுத்து தக்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

அந்த மூன்று வீரர்களுக்கு மட்டும் அணிகள் மொத்தமாக 65 கோடி ரூபாயை செலவளித்திருக்கின்றன. தக்கவைக்கப்பட்டிருக்கும் வீரர்களின் பட்டியலில் அதிக சம்பளம் வாங்கும் அந்த 3 வீரர்கள் யார் யார்?

ஐ.பி.எல்

ஹென்றிச் க்ளாசென்:

சன்ரைசர்ஸ் அணி ஹென்றிச் க்ளாசனை 23 கோடி ரூபாய் கொடுத்துத் தக்க வைத்திருக்கிறது. அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸூக்குக் கூட சன்ரைசர்ஸ் அணி ரூ.18 கோடிதான் கொடுத்திருக்கிறது. க்ளாசெனுக்கு அவரைவிட அதிகமாக 5 கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறார்கள். 2023 சீசனுக்கு முன்பாக க்ளாசெனை 5.25 கோடி ரூபாய்க்குத்தான் சன்ரைசர்ஸ் வாங்கியிருந்தது. அதிலிருந்து கணக்கிட்டால் இப்போது அதைவிட 18 கோடி அதிகமாகக் கொடுத்திருக்கிறார்கள்.

Klassen

இதிலிருந்தே அணிக்குள் அவரின் மதிப்பு என்னவென்பது தெரிகிறது. க்ளாசென் மேட்ச் வின்னர். தலைசிறந்த டி20 ஆட்டக்காரர். உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கொஞ்சம் விட்டிருந்தால் இந்தியாவின் வெற்றியை தடுத்திருப்பார். மேலும், சன்ரைசர்ஸ் அணியின் ‘CORE’ வீரர்களில் ஒருவர். இந்த காரணங்களால்தான் சன்ரைசர்ஸ் அணி க்ளாசெனுக்கு இத்தனை கோடிகளை கொட்டிக் கொடுத்திருக்கிறது.

விராட் கோலி:

பெங்களூரு அணி விராட் கோலிக்கு 21 கோடி ரூபாயைக் கொடுத்துத் தக்க வைத்திருக்கிறது. கோலி பெங்களூரு அணியின் முகம். அவர் இல்லாமல் அணி இல்லை. அதனால் அவருக்கு இவ்வளவு பெரிய தொகை கொடுக்கப்பட்டதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. 2022 சீசனுக்கு முன்பாக வீரர்களைத் தக்க வைத்த சமயத்தில் கோலிக்கு 15 கோடி ரூபாயை பெங்களூரு கொடுத்தது. இந்த முறை அதைவிட அதிகமாக 6 கோடி ரூபாயை சேர்த்து வழங்கியிருக்கிறது. விராட் கோலியின் ஃபார்ம் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் பற்றி ஆயிரத்தெட்டு கேள்விகள் இருந்தாலும் பெங்களூரு அணி அவரை நம்புகிறது.

Virat Kohli

கடந்த மூன்று சீசன்களிலும் கேப்டனாக இருந்த டூப்ளெஸ்சிஸை RTM மூலம் அழைத்து வர முயற்சிக்கலாம். இன்னொரு பேச்சும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது, விராட் கோலியையே மீண்டும் கேப்டன் பதவியை ஏற்குமாறு அணி நிர்வாகம் பேசி வருவதாகச் சொல்கிறார்கள்.

நிக்கோலஸ் பூரண்:

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிக்கோலஸ் பூரனை 21 கோடி ரூபாய் கொடுத்துத் தக்கவைத்திருக்கிறது. முன்பு அவரை ஏலத்தில் எடுத்த போது 16 கோடி ரூபாய்க்குதான் எடுத்திருந்தது. இப்போது 5 கோடி ரூபாயை அதிகமாக வழங்கியிருக்கிறது. லக்னோ அணி கே.எல்.ராகுலை விடுவித்திருக்கிறது. தங்கள் அணியில் ஒரு பெரிய வீரரைத் தக்கவைத்தே ஆக வேண்டும் என்கிற முனைப்பில் பூரனை அவர்கள் தக்கவைத்திருக்கலாம். பூரன் ஒரு விக்கெட் கீப்பர். அதிரடியாக பேட்டிங் ஆடக்கூடியவர். கேப்டனாகவும் செயல்படுவார். ஒரே வீரராக நிறைய பாக்ஸ்களில் டிக் வாங்குவதால் லக்னோ அணி அவருக்கு இத்தனை கோடிகளைத் தயக்கமின்றி கொடுத்திருக்கிறது.

Pooran

இவர்கள் போக ரஷீத்கான், சாம்சன், ருத்துராஜ், ஜடேஜா, பும்ரா, கம்மின்ஸ், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு தலா 18 கோடி ரூபாயை அந்தந்த அணிகள் வழங்கியிருக்கின்றன.

இதில் யாருக்குக் கொடுத்த சரியான முடிவு என நினைக்கிறீர்கள் உங்கள் கருத்தை கமென்ட் பண்ணுங்க

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com