IPL 2025: 'CSK க்கு மாறும் பண்ட்?;ராகுலுக்கு சண்டை'- விடுவிக்கப்பட்ட கேப்டன்களும் பின்னணியும்

Share

மும்பையிலுள்ள பிசிசிஐ யின் தலைமை அலுவலகத்தில் தாங்கள் தக்கவைக்கப் போகும் வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு ஐ.பி.எல் அணியும் சமர்பித்திருக்கிறது. பல அணிகளும் எதிர்பார்த்த வீரர்களையே டிக் அடித்திருக்க சில அணிகள் பெரிய சர்ப்ரைஸைக் கொடுத்திருக்கின்றன.

KKR v DC

அதில் முக்கியமானது கொல்கத்தா அணி. தங்களுக்கு கடந்த சீசனில் கோப்பையை வென்று கொடுத்த கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயரையே அந்த அணி தக்கவைக்காமல் விடுவித்திருக்கிறது. டெல்லி அணியும், லக்னோ அணியும் தங்களின் கேப்டன்களான ரிஷப் பண்ட்டையும் கே.எல்.ராகுலையும் விடுவித்திருக்கிறது. பெரிய தலைகளை அந்த அணிகள் விடுவித்ததற்கான காரணம் என்னவாக இருக்கும்?

கேப்டன்சி விவகாரத்தில் சண்டையாகிப் போய்தான் ஸ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணியிலிருந்து வெளியேறினார். 2022 சீசனுக்கு முன்பான ஏலத்தில் கொல்கத்தா அணி ஸ்ரேயாஷை 12.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனும் ஆக்கியிருந்தது. கடந்த 3 சீசன்களில் இரண்டு சீசன்களில் ஸ்ரேயாஸ்தான் அந்த அணியின் கேப்டனாக இருந்தார். 2023 சீசனில் அவர் காயம் காரணமாக விளையாடவில்லை. 2022 சீசனில் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் ஏழாம் இடம்பிடித்திருந்தது. கடந்த சீசனில் கொல்கத்தா அணி சாம்பியன். ஸ்ரேயாஸ் ஐயரும் இந்த இரண்டு சீசன்களிலும் ஓரளவுக்கு நன்றாகவே ஆடியிருக்கிறார். 2022 சீசனில் 401 ரன்களையும் 2024 சீசனில் 351 ரன்களையும் எடுத்திருந்தார்.

அணிக்காக டைட்டிலை வென்று கொடுத்த கேப்டன் என்பதால் கொல்கத்தா அணி அவரை தக்கவைக்கவே விரும்பியிருக்கும். மேலும், அணியின் உரிமையாளரான ஷாரூக்கும் தனக்கு டைட்டில் வாங்கிக் கொடுத்த கேப்டனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார். அப்படியிருந்தும் ஸ்ரேயாஷ் ஐயர் அணியில் தக்கவைக்கப்படவில்லை எனில் இந்த முடிவை ஸ்ரேயாஸே எடுத்திருப்பார் என்றுதான் புரிந்துகொள்ள முடியும்.

Shreyas Iyer

ஒரு அணி 6 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ சொல்லியிருக்கிறது. மேலும், ரூ.18 கோடி, ரூ.14 கோடி, ரூ.11 கோடி, ரூ.18 கோடி, ரூ.14 கோடி, ரூ.4 கோடி என தக்கவைக்கப்படும் வீரர்களுக்கான ஊதிய வரம்பையும் பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது. இதில் ட்விஸ்ட் என்னவெனில் அணி நிர்வாகம் ஒரு வீரருக்கு அது சொல்லியிருக்கும் தொகையைவிட கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ கூட கொடுத்து வீரர்களை ஒப்பந்தம் செய்யலாம் என்றும் பிசிசிஐ சொல்கிறது. இதுதான் கொல்கத்தாவுக்கு பிரச்னையாகியிருக்கும். கோப்பையை வென்று கொடுத்த கேப்டனை முதல் ஆப்சனாக 18 கோடி ரூபாய்க்குத் தக்கவைக்க கொல்கத்தா விரும்பியிருக்கும்.

இது நல்ல தொகைதான். ஆனால், ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்தத் தொகையில் உடன்பாடு ஏற்பட்டிருக்காது. டைட்டிலை வென்ற கேப்டன் என்பதால் தன்னுடைய மதிப்பு ரூ.18 கோடியை விட அதிகமென அவர் நினைத்திருக்கலாம்.

கொல்கத்தா அணி 18 கோடியே அவருக்கு உகந்த தொகைதான் என நினைத்திருக்கும் அல்லது அவர்கள் 18 கோடிக்க்கு குறைவாக கூட ஸ்ரேயாஸிற்கு ஆபர் கொடுத்திருக்கலாம். இதுதான் பிரச்சனை. கொல்கத்தா அணி கடந்த சீசனில் ஸ்டார்க்கிற்கு ரூ.24.75 கோடி வரை செலவளித்திருந்தது. அப்படியொரு பெரிய தொகையைத்தான் ஸ்ரேயாஸ் எதிர்பார்த்திருப்பார்.

அவ்வளவு பெரிய தொகையை ஸ்ரேயாஸ் ஐயருக்கு மட்டுமே கொடுத்துவிட்டு ஏலத்தில் வீரர்களை எடுக்கத் திணறுவதை கொல்கத்தா விரும்பியிருக்காது. மேலும், ஸ்ரேயாஸ் இப்போதெல்லாம் உள்ளூர் போட்டிகளை தவிர்க்கிறார். இந்திய அணியில் ஆடுவதில்லை. பிசிசிஐயின் வருடாந்திர ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டது என ஸ்ரேயாஸ் ஐயரைச் சுற்றியே ஆயிரத்தெட்டு சர்ச்சைகள். அப்படியிருக்க ஐயர் எதிர்பார்க்கும் தொகையை வழங்குவதில் கொல்கத்தாவுக்கு தயக்கம் ஏற்பட்டிருக்கும். இதுதான் ஸ்ரேயாஸை ரிலீஸ் செய்யக் காரணமாகவும் இருக்க வேண்டும்.

Rishabh Pant

ரிஷப் பண்ட் டெல்லி அணியுடன் நல்ல உறவில்தான் இருந்தார். டெல்லி அணியும் ரிஷப் பண்ட்டை கேப்டனாக்கி அழகு பார்த்தது. அணியின் உரிமையாளர்கள் சில வாரங்களுக்கு முன்பு பேசுகையில் கூட ரிஷப் பண்ட்டை தக்கவைக்கப் போவதாகத்தான் கூறினார்கள். ஆனால், இப்போது அவரை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். இது பண்ட்டினுடைய முடிவாகக் கூட இருக்கலாம். சென்னை அணி அவருடன் பேசி வருவதாகச் சொல்கிறார்கள். தோனி ரிஷப் பண்ட்டை மஞ்சள் ஜெர்சி அணிய வைக்க ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது சென்னையைப் போன்று வேறு பெரிய அணிகள் கூட பண்ட்டுக்கு ஏலத்துக்கு வருமாறு நம்பிக்கை அளித்திருக்கலாம்.

கே.எல்.ராகுலுக்கும் லக்னோ அணிக்கும் கடந்த சீசனிலேயே உறவு முறிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. லக்னோ அணியின் உரிமையாளர் கே.எல்.ராகுலிடம் மைதானத்தில் வைத்தே கடுமையாகப் பேசியதை உலகமே வேடிக்கை பார்த்தது. பின்னர், அதைச் சமாளிக்கும் வகையில் அவர் ராகுலை தன் இல்லத்துக்கு அழைத்து விருந்து வைத்து உபசரித்த சம்பவமெல்லாம் நடந்திருந்தது. அப்போதே ராகுல் லக்னோ அணியுடனான உறவை முறிப்பார் எனப் பேசப்பட்டது. அது இப்போது நடந்திருக்கிறது.

KL Rahul

முக்கியமான ஸ்டார் வீரர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதன் மூலம் அவர்கள் ஏலத்துக்கு வருவது உறுதியாகியிருக்கிறது. ஆக, ஏலம் வழக்கத்தை விட சுவாரஸ்யமாக இருக்குமென எதிர்பார்க்கலாம்.

இந்த முடிவுகள் குறித்த உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com