2010-க்குப் பின் பல்லாண்டுகளாக ஒளியை விழுங்கும் குகைக்குள் அடையாளமின்றி பயணித்து வந்தது டெல்லி. துருவ நட்சத்திரமான பாண்டிங்கின் வரவுக்குப் பின்தான் வெளிச்சமே தென்பட்டு பிளே ஆஃப் வரவேற்பையே பெறவும் தொடங்கியது. 2020-ல் ஸ்ரேயாஸால் இறுதிப் போட்டியை எட்டிய அணியை பண்ட் சாம்பியனாக்குவார் என எதிர்பார்ப்பு நிலவ, சற்றே சரிவைச் சந்தித்த அணி கடந்த சீசனில் 50 சதவிகிதம் வெற்றியோடு ஐந்தாவது இடத்தில் முடித்தது.
இம்முறையோ பன்முக வீரரான பண்ட்டின் வல்லமையோடு ஆளுமையையும் ஒருங்கே இழந்து டெல்லி தடுமாறுகிறது. வார்னர் என்னும் ராஜாளியின் வசம் சேர்ந்துள்ள அணிக்கு இம்முறை வானம் வசப்படுமா அல்லது ஓடுதளத்திலேயே உடைந்த சிறகுகளோடு விபத்தினையே சந்திக்குமா?
சன்ரைசர்ஸால் சுட்டெரிக்கப்பட்ட பின் கடந்தாண்டு ஃபீனிக்ஸாக மீண்டு வந்தார் வார்னர். டெல்லிக்காக ஆடிய கடந்த சீசனில் 150.5 ஸ்ட்ரைக்ரேட்டோடு 432 ரன்களையும் குவித்தார். பேட்ஸ்மேனாக சோடை போகவில்லை எனக் காட்டிய அவருக்கு கேப்டனாகவும் தன்னை நிருபிக்க இன்னொரு தளம் கிடைத்துள்ளது. மீதமுள்ள பகைதீர்க்க தனது அனுபவத்தினைப் பயன்படுத்தி தனது 100 சதவிகிதத்தையும் இங்கே வார்னர் வெளிப்படுத்துவார்.
பலம் பொருந்திய பேட்டிங் லைன்அப் டெல்லியை வலுவானதாக்குகிறது. ப்ரித்வி ஷா உள்ளூர் கிரிக்கெட்டைக் கலங்கடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த சயத் முஸ்டாக் அலி தொடரில் மட்டும் அவரது ஸ்ட்ரைக்ரேட் 181.42. ஒன்டவுனில் இறங்கும் மார்ஷ் ஒருநாள் தொடரில் இந்தியாவுக்கு எதிராகக் காட்டிய வித்தையில் இருந்தே இன்னமும் பலரால் மீளமுடியவில்லை. இவர்கள் மட்டுமின்றி அடுத்தடுத்த இடத்தில் இறங்க வாய்ப்புள்ள மணீஷ் பாண்டே, பவல்/ரோசோ, சர்ஃப்ராஸ் கான் என எல்லோருமே தங்களது ப்ரைம் டைமில் இருக்கின்றனர். இவர்கள் போதாதென தரமுயர்த்தப்பட்ட பேட்டிங்கை சர்வதேச அளவிலேயே காட்சிப்படுத்தி விட்ட அக்ஸரோ முன்வரிசை வீரர்களோடு தோள்கொடுப்பதோடு கேம் சேஞ்சர் கதாபாத்திரத்தையும் சமயத்தில் தாங்குபவர்.