டெபாசிட் இழக்குமென கணிக்கப்பட்ட கட்சி, அதிகப் பெரும்பான்மையோடு ஆட்சியில் அமர்ந்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருந்தது கடந்தாண்டு குஜராத் டைட்டன்ஸ் கோப்பையை வென்றது!
`Beginners’ Luck’ எனச் சிலரால் அதனை ஏற்க முடியாவிட்டாலும் உண்மையில் ஆர்ப்பாட்டமே இல்லாத ஓர் அழகான அபாரமான வெற்றி அது. இம்முறை குஜராத் எவ்வளவு பலம் கொண்டிருக்கிறது, சிஎஸ்கே, மும்பை மட்டுமே இதுவரை செய்து காட்டியிருந்த கோப்பையை டிஃபெண்ட் செய்யும் வித்தையை குஜராத்தும் நிகழ்த்திக் காட்டுமா?
இறுதிப் போட்டியில் இருந்த வீரர்களில் ஃபெர்கூசனை மட்டும் கேகேஆரிடம் டிரேடிங்கில் கைமாற்றி விட்டிருந்த குஜராத் மற்றவர்கள் அனைவரையும் அப்படியே தக்க வைத்திருந்தது.
குஜராத்தைப் பொறுத்தவரை மிகப்பெரிய பலம், அவர்களது பௌலிங். கடந்த சீசனில் பவர்பிளேயில் சிறந்த பௌலிங் ஸ்ட்ரைக்ரேட்டும் (21.33), டெத் ஓவர்களில் சிறந்த எக்கானமியும் (9.60) குஜராத்தின் வசமே. ஷமியும், ரஷித்தும் பகையை மிச்சமின்றி முடிக்கக் கூடியவர்கள். அவர்களது மோசமான நாள்களில்கூட விக்கெட் விழாது போகுமே தவிர ரன்கள் கசியாது. ஷமி எந்த ஒரு கட்டத்திலும் நம்பத்தகுந்தவராக மிளிர மத்திய ஓவர்களில் மட்டுமின்றி ஆரம்பத்திலேயேகூட ரஷித்தினைக் கருவியாக்கி அணியின் உத்வேகத்தை வேகமிழக்காது பாண்டியா பார்த்துக் கொண்டார்.
இவ்விருவரோடு பாண்டியாவும் சேரும்போது அந்த 12 ஓவர்கள் எதிரணிக்கான அத்தனை வாய்ப்புகளையும் தின்று செறித்து விடும்.