அவருடன் சேர்ந்து துவக்கம் தர வேண்டியவர் ப்ரப்சிம்ரன் சிங். நடந்து முடிந்த சையது முஷ்டக் அலி தொடரில் சிறந்த ஃபார்மில் இருந்தார். அனுபவம் வாய்ந்த தவானுடன் இணைந்து இவர் தரும் தொடக்கம்தான் பஞ்சாப் அணியின் பவர்பிளே ஸ்கோரை முடிவு செய்யப் போகிறது.
அடுத்ததாக இந்த அணியின் மிடில் ஆர்டர். பனுகா ராஜபக்சா, லியாம் லிவிங்ஸ்டன், தமிழகத்தின் ஷாருக்கான் என அதிரடியாகக் காட்சி தந்தாலும் உள்ளே சற்று உற்று நோக்கினால் ஸ்ரீகாந்த் கூறுவது போல ‘பட்டா பாக்கியம்… படாட்டி லேகியம்’ வகையறா வீரர்கள்தான் இவர்கள். லிவிங்ஸ்டன் இப்போதுதான் காயத்திலிருந்து திரும்புகிறார். இவரது பேட்டிங்கும் எவ்வளவு நேரம் களத்தில் நிற்கிறார் என்பதும் பஞ்சாப் அணியின் பேட்டிங் ஸ்கோரை நிர்ணயிக்கும். ராஜபக்சாவும் அராப் டி20, பாகிஸ்தான் சூப்பர் லீக் என எதிலும் பெரிதாகத் தன்னுடைய திறனை நிரூபிக்கவில்லை. தன்னுடைய வழக்கமான அதிரடியைப் பயன்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தித் தந்தால் அது பஞ்சாபுக்குப் பெரிய பக்கபலமாக இருக்கும். ஃபார்முக்குத் திரும்ப வேண்டிய மற்றொரு பஞ்சாப் வீரர் சாருக் கான். நடந்து முடிந்த சையது முஷ்டக் அலி தொடரில் இவரது சராசரி 9 தான். ஆனாலும் இவரது அதிரடி பேட்டிங்கை எப்போதும் குறைத்து மதிப்பிட முடியாது. தேவையான நேரத்தில் வரும் இரண்டு சிக்ஸர்கள் கூட ஆட்டத்தை மாற்றுவதை நாம் பார்த்திருக்கிறோம். இவர்களுடன் சாம் கரணும் இருப்பது மற்றொரு நல்ல விஷயம்.