பஞ்சாப்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டை இழந்து 146 ரன்களை சேர்த்தது. வெற்றிக்கு 24 பந்துகளில் 46 ரன்கள் தேவை என்ற சூழலில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் – ஷிகர் தவான் இணை தொடக்கம் கொடுத்தது. பிரப்சிம்ரன் சிங் 2 சிக்ஸர், 2 ஃபோர் என அதிரடி ஆட்டத்தில் இறங்கினாலும் 2-வது ஓவரிலேயே அவுட்டாகி நடையைக் கட்டினார். பனுகா ராஜபக்ஷா, ஷிகர் தவான் பாட்னர்ஷிப் அமைத்து, கொல்கத்தாவின் பந்துகளை பஞ்சாக பறக்கவிட்டனர். இருவரின் அதிரடியால் பஞ்சாப் அணி 10 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 100 ரன்களைச் சேர்த்தது.
32 பந்துகளில் 50 ரன்களைச் சேர்த்த பனுகா ராஜபக்ஷாவை உமேஷ் யாதவ் விக்கெட்டாக்கினார். அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா 2 சிக்ஸர்களை விளாசி 21 ரன்களை தன் பங்குக்கு சேர்த்துவிட்டு கிளம்பினார். அணிக்கு நம்பிக்கையளிப்பார் என எதிர்பார்த்த தவான் (40ரன்கள்) வருண் சக்ரவர்த்தியால் போல்டாக்கப்பட்டு பெவிலியன் திரும்பினார். தொடக்கத்தில் அதிரடி காட்டிய பஞ்சாப் அணி விக்கெட்டு இழப்பால் தடுமாறி 15 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை சேர்த்தது.
அடுத்து வந்த சிக்கந்தர் ராசா (16) பெரிதாக சோபிக்கவில்லை. சாம் கரன் இறுதி ஓவரில் சிக்ஸர் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களைச் சேர்த்தது. சாம் கரன் 26 ரன்களுடனும், ஷாருக்கான் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கொல்கத்தா அணி தரப்பில் டிம் சவுதி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரரான மந்தீப் சிங் 2 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த அனுகுல் ராய் 4 ரன்களில் அவுட்டானார். 2 ஓவரில் 2 விக்கெட் என தள்ளாடிய கொல்கத்தாவுக்கு நம்பிக்கையளித்த ரஹ்மானுல்லா குர்பாஸ் 22 ரன்களுடன் சுருங்கினார்.
வெங்கடேஷ் ஐயர் நிலைக்க, அவருடன் பாட்னர்ஷிப் அமைத்த நிதிஷ் ராணா 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ரின்கு சிங் 4 ரன்களில் விக்கெட்டாக, 11 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 83 ரன்களுடன் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது கொல்கத்தா.
2 சிக்ஸர், 3 ஃபோர்களை விளாசிய ஆண்ட்ரே ரஸ்ஸல் 35 ரன்களுடன் சாம்கரன் பவுலிங்கில் வீழ்ந்தார். நிலைத்து ஆடுவார் என நம்பிய வெங்கடேஷ் ஐயர் 34 ரன்களில் பெவிலியன் திரும்பும்போது அணியின் நிலைமை மோசமானது.
16 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 146 ரன்களை சேர்த்திருந்தது கொல்கத்தா. வெற்றிக்கு 24 பந்துகளில் 46 ரன்கள் தேவை என்ற நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், சாம் கரன், நாதன் எலீஸ், சிகந்தர் ராஜா, ராகுல் சாஹர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.