விஸ்வரூபம் எடுத்த ரஷித் கான்:
‘விஸ்வரூபம்’ படத்தில் கமல், தொடக்க சண்டை காட்சியில் அதுவரை இல்லாத விஸ்வரூபத்தை எடுத்திருப்பார். அந்த மாதிரியான உருமாற்றம்தான், நேற்றைய போட்டியில் ரஷித் கான் செய்த பேட்டிங்கும். பௌலிங்கில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பேட்டிங் செய்த போது, 3 பவுண்டரிகளும் 10 சிக்ஸர்களும் அடித்து அசத்தினார். 32 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து மிரள வைத்தார். ஐபிஎல் வரலாற்றில், இன்னிங்ஸின் 8வது பேட்ஸ்மனாகக் களமிறங்கி அதிக ரன்கள் அடித்த முதல் வீரரராக ரஷித் கான், சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில், ரஷித் கான் அடித்த முதல் அரைசதமும் இதுவே. இதுவரை 403 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 550 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். “எந்த ரூபம் எடுப்பான், எவருக்குத் தெரியும்? சொந்த ரூபம் மாற்றி மாற்றி எடுப்பான், விஸ்வரூபம்.”
LSG அணியின் முதல் கிரிக்கெட் அகாடமி:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் ஒரு புதிய கிரிக்கெட் அகாடமியைத் தொடங்கியுள்ளது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. அந்த அணி தொடங்கியுள்ள முதல் கிரிக்கெட் அகாடமியும் இதுதான். உத்தரப்பிரதேசம் மற்றும் நாடு முழுவதும் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த CricFitSport (CFS) கிரிக்கெட் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து இதனை உருவாகியுள்ளது. லக்னோ அணியின் பயிற்சியாளர்களான கௌதம் கம்பீர், மோர்னே மோர்கல், ஜான்டி ரோட்ஸ், பிரவின் டாம்பே உள்ளிட்ட பலரும் இந்த அகாடமியின் வழிகாட்டிகளாகச் செயல்படுவார்கள் என LSG அணி அறிவித்துள்ளது.
பிங்க் ஜெர்ஸியில் குஜராத்:
குஜராத் டைட்டன்ஸ் அணி வருகின்ற மே 15-ம் தேதி, நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, தங்களின் நீல ஜெர்ஸிக்குப் பதிலாக பிங்க் நிற ஜெர்ஸியில் விளையாடவுள்ளது. புற்றுநோய்க்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக குஜராத் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.