சச்சின் டெண்டுல்கருக்கு இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்கு எழும் கேள்வி என்னவெனில் அர்ஜுன் டெண்டுல்கர் ஏன் மும்பை இந்தியன்ஸ் அணியினால் தேர்வு செய்யப்படுவதில்லை என்பதே. இடது கை வேகப்பந்து வீச்சாளர், டீசண்டான பேட்டிங் கொண்ட ஆல்ரவுண்டரும் ஆவார் அர்ஜுன் டெண்டுல்கர்.
ஐபிஎல் தொடர்களில் அர்ஜுன் டெண்டுல்கர் ரூ.30 லட்சத்திற்கு வாங்கப்பட்டார். ஆனால் இன்னமும் அறிமுகமாகவில்லை. கடந்த ஐபிஎல் தொடரில் அர்ஜுன் டெண்டுல்கர் குறித்த கேள்வி பெரிய அளவுக்கு எழுப்பப்பட்டது. அப்போது மும்பை இந்தியன்ஸ் பவுலிங் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் கூறும்போது, “அர்ஜுன் இன்னும் உயரிய மட்டத்திற்கு தயாராகவில்லை, அவர் இன்னும் கொஞ்சம் கடினமாக சில பகுதிகளில் பணியாற்ற வேண்டியுள்ளது.
அணிக்குள் வந்து விடலாம், ஆனால் பிளேயிங் லெவனில் செலக்ட் ஆவது என்பது வேறு விஷயம். அர்ஜுன் தன் பேட்டிங், மற்றும் ஃபீல்டிங்கை இன்னும் மேம்படுத்த வேண்டியுள்ளது. அனைவருக்கும் ஒரு போட்டியிலாவது வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது சரிதான். ஆனால் ஒரு வீரர் தன் இடத்தை அவர்தான் வெல்ல வேண்டும். அர்ஜுன் இன்னும் கிரிக்கெட் திறனில் சில இடங்களில் முன்னேற்றம் தேவைப்படுபவர். விரைவில் இதை சரி செய்து அணியில் இடம்பெறுவார்” என்றார்.
ஆனால், இந்த முறை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறும்போது, “அர்ஜுன் டெண்டுல்கர் காயத்திலிருந்து வந்துள்ளார். எனவே அவரை மதிப்பீடு செய்வோம். அவர் அணித்தேர்வுக்குத் தகுதியாக இருந்தால் அது நல்லது. அணியின் எதிர்காலத்தை மனதில் கொண்டு சில இடங்களை இளம் வீரர்களுக்கு ஒதுக்கலாம் என்று இருக்கின்றோம். இது ஒரு பெரிய தொடர் இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க ஐபிஎல் ஒரு சிறந்த நடைமேடையாகும்” என்றார். ஆகவே இந்தமுறை அர்ஜுன் டெண்டுல்கர் ஓரிரு போட்டிகளிலாவது ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
அர்ஜுன் டெண்டுல்கர் இதுவரை 7 முதல் தர போட்டிகள், 7 லிஸ்ட் ஏ போட்டிகள், 9 டி20 போட்டிகளில்தான் ஆடியுள்ளார். அனைத்து வடிவங்களிலும் 32 விக்கெட்டுகளையும் 268 ரன்களையுமே எடுத்துள்ளார் அர்ஜுன். எது எப்படியிருந்தாலும் சச்சின் ‘கிரீன் சிக்னல்’ கொடுக்காமல் அர்ஜுன் இறங்குவது கடினமே. ஒரு முழுமையான வீரராக தயாரானால் மட்டுமே அர்ஜுனை இறக்க சச்சின் அனுமதிப்பார் என்று கருத இடமுண்டு.