மும்பை: டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சுழலில் சிக்கி துவம்சம் ஆனது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். டெல்லி வெற்றி பெற 147 ரன்கள் தேவை என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனின் 41-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பந்த், பவுலிங் தேர்வு செய்தார். கொல்கத்தா அணி முதலில் பேட் செய்தது. அந்த அணிக்காக வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஆரோன் ஃபின்ச் களம் இறங்கினர். இருவரும் பவர்பிளே ஓவர்களிலேயே தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.
தொடர்ந்து வந்த மூன்று பேட்ஸ்மேன்களில் அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரை தவிர மற்ற இருவரும் (பாபா இந்திரஜித் மற்றும் சுனில் நரைன்) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 35 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது கொல்கத்தா. இருந்தாலும் நித்திஷ் ராணாவுடன் பேட்டிங்கில் கூட்டணி அமைத்தார் ஷ்ரேயஸ். இருவரும் 48 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
42 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார் ஷ்ரேயஸ். மறுமுனையில் விளையாடிய நித்திஷ் ராணா கடைசி ஓவர் வரை விளையாடினார். 20-வது ஓவரின் நான்காவது பந்தில் 57 ரன்கள் எடுத்து அவுட்டானார் அவர். ரிங்கு சிங், 16 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்து அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்தது கொல்கத்தா.
டெல்லி அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 ஓவர்கள் வீசி, 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதில் ஹாட்ரிக் வாய்ப்பை மிஸ் செய்தார் அவர். முஸ்தபிசுர் ரஹ்மான், 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சக்காரியா மற்றும் அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தனர். 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டுகிறது டெல்லி.