ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி, முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.
நடப்பு ஐபிஎல் சீசனில் 57வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய குஜராத் அணிக்கு சுப்மன் கில் எடுத்த 63 ரன்கள் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட்களை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.
எட்டக்கூடிய இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் மூவரை தவிர, மற்ற எல்லாரும் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்தனர். குஜராத் பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி லக்னோ பேட்ஸ்மேன்களை வீழ்த்தினர். குறிப்பாக, ரஷீத் கான் நான்கு விக்கெட்களை வீழ்த்தினர்.
இதனால், 82 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே அனைத்தும் விக்கெட்களை இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தீபக் ஹூடா 27 ரன்கள் எடுத்திருந்தார். குஜராத் அணி தரப்பில் ரஷீத் கான் நான்கு விக்கெட்களும், யஷ் தயாள் மற்றும் சாய் கிஷோர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் குஜராத் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.