மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் 6வது வெற்றியை பதிவு செய்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
ஐபிஎல் 65வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி, இளம் வீரர்கள் பிரியம் கார்க் மற்றும் ராகுல் திரிபாதி இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரியம் கார்க் 42 ரன்களும், திரிபாதி 76 ரன்களும் சேர்க்க, அவர்களுக்கு உறுதுணையாக நிகோலஸ் பூரன் 38 ரன்கள் எடுத்தார். இதனால், 20 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்தது.
பவர் ஹிட்டர்கள் அதிகம் கொண்ட அணியாக அறியப்படும் மும்பை இந்தியனஸ்க்கு இம்முறை ரோஹித் மற்றும் இஷான் கிஷன் இணை 10வது வரை நீடித்தது. இருவரும் சன்ரைசர்ஸ் அணியின் பவுலிங்கை சிதறடித்தனர். இதனால் 10 ரன்கள் ரேட்டில் சென்றது அணியின் ஸ்கோர். 11வது ஓவரின் போது 48 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் சர்மா அவுட் ஆகினார்.
அவரைத் தொடர்ந்து சில மணித்துளிகளில் இஷான் கிஷனும் 43 ரன்களுக்கு நடையைக் கட்டினார். டேனியல் சாம்ஸ் 15 ரன்களிலும், திலக் வர்மா 8 ரன்களிலும் அவுட் ஆக மும்பை அணி நெருக்கடியை எதிர்கொண்டது. ஆனால் இளம் வீரர் டிம் டேவிட் நடராஜனின் கடைசி ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்கள் விளாசி அதிரடி காட்டினார். இதனால் வெற்றி இலக்கை நெருங்கியது மும்பை. ஆனால் அதே ஓவரின் கடைசி பந்தில் அவரை ரன் அவுட் மூலம் வெளியேற்றினார் நடராஜன். 18 பந்துகளை சந்தித்த டிம் டேவிட் 46 ரன்கள் சேர்த்திருந்தார்.
இதன்பின் இரண்டு ஓவர்களுக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை வீசிய புவனேஷ்வர்குமார், ஓவரை மெய்டனாக வீசியதுடன் ஒரு விக்கெட் வீழ்த்தி சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி இருந்தார். இறுதி ஓவரில் 19 ரன்களுக்கு 16 ரன்கள் மட்டுமே மும்பை அணியால் சேர்க்க முடிந்தது. இதனால் மூன்று விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை மீண்டும் தோல்வியை தழுவியது. உம்ரான் மாலிக் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த தொடரில் மும்பை அணி சந்திக்கும் 10வது தோல்வி இதுவாகும். அதேநேரம், சன்ரைசர்ஸ் அணிக்கு இது 6வது வெற்றி. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இன்னும் அந்த அணிக்கு ஒரு வெற்றி தேவைப்படுகிறது.