வான்கடே: நடப்பு ஐபிஎல் சீசனின் 59-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள், வான்கடே மைதானத்தில் விளையாடின. இந்த போட்டியில் டாஸை இழந்த சென்னை அணி முதலில் பேட் செய்தது. வெறும் 97 ரன்களில் ஆல்-அவுட்டானது சென்னை. மளமளவென விக்கெட்டுகளை சென்னை பறிகொடுத்ததே இதற்கு காரணம். இதில் சென்னை வீரர் டெவான் கான்வே எதிர்கொண்ட முதல் பந்து அவரது பேடில் பட, LBW முறையில் அவுட் என நடுவர் அறிவித்தார்.
ஆனால் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் DRS முடிவை கான்வே எடுக்க முடியவில்லை. ஏனெனில், மைதானத்தில் மின் தடை காரணமாக அந்த ஆப்ஷன் அவருக்கு மறுக்கப்பட்டது. அதனால் அவர் களத்தை விட்டு வெளியேறினார். இதன்பின் வந்தவர்களில் தோனி மட்டுமே அதிகபட்சமாக 36 ரன்களை எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வருவதும் போவதுமாக இருந்தனர். இதனால் 97 ரன்களில் ஆல்-அவுட்டானது சென்னை. மும்பை தரப்பில் டேனியல் சாம்ஸ் 3 விக்கெட்டும், ரிலே மெரிடித் மற்றும் குமார் கார்த்திகேயா தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
எளிய இலக்கை நோக்கை களமிறங்கிய மும்பை அணியும் விக்கெட் சரிவை எதிர்கொண்டது. முதல் ஓவரிலேயே இஷான் கிஷன் 6 ரன்களுக்கு நடையைக் கட்டினார். அவரை தொடர்ந்து அதிரடியாக தொடக்கம் கண்ட ரோஹித் சர்மாவும் 18 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பின் வந்த அறிமுக வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் டேனியல் சாம்ஸ் வந்த வேகத்தில் முகேஷ் சௌத்ரியிடம் விக்கெட்டை பறிகொடுத்தாலும், மறுபுறம் திலக் வர்மா நிலைத்து நின்று விளையாடி அணியை இலக்கை எட்ட வைத்தார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 34 ரன்கள் சேர்த்து உதவினார். அவருக்கு பக்கபலமாக இருந்த ஹிருத்திக் ஷோக்கீன் 18 ரன்களும் மற்றும் டிம் டேவிட் 16 ரன்களும் சேர்த்தனர். சென்னை அணி தரப்பில் முகேஷ் சௌத்ரி அதிகபட்சமாக மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பெறும் மூன்றாவது வெற்றி இதுவாகும். ஏற்கனவே பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் இன்னும் இரண்டு ஆட்டங்களில் மும்பை விளையாடவுள்ளது. அதேநேரம் இன்றைய தோல்வி மூலம் சென்னை அணியும் பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியுள்ளது.