Last Updated : 10 May, 2022 07:40 AM
Published : 10 May 2022 07:40 AM
Last Updated : 10 May 2022 07:40 AM

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 55-வது லீக் ஆட்டம் நேற்று முன்தினம் மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்தது. பின்னர் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 17.4 ஓவர்களில் 117 ரன்களில் ஆட்டமிழந்து 91 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. வெற்றி குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியதாவது:
இந்த ஆட்டத்தில் நாங்கள் சிறப்பான திறனை வெளிப்படுத்தினோம். பேட்ஸ்மேன்கள் மிகவும் அபாரமாக விளையாடி ரன்களை குவித்தனர். இது மாதிரியான வெற்றி முன்னதாகவே வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ரன்களை அதிகமாக குவிக்கும் போது பந்து வீச்சாளர்களுக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கும். டெல்லி அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவது அவசியமாகும். முகேஷ் சவுத்ரி, சிமர்ஜித் திறமையானவர்கள். இவர்கள் ஆட்டத்தில் முதிர்ச்சி அடைய நிறைய போட்டிகளில் விளையாட வேண்டும்.
20 ஓவர் போட்டியை பொறுத்தவரை எந்த பந்தை வீசக்கூடாது என்பதைத்தான் பந்துவீச்சாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது குறித்து நான் யோசிக்கவில்லை. பிளே ஆஃப், நிகர ரன் விகிதம் குறித்து நினைத்தால் தேவையில்லாத அழுத்தம்தான் ஏற்படும்.
இப்போதைக்கு அதுதான் தேவை. நான் கணக்கு பாடத்தை பெரிதாக விரும்புபவன் அல்ல. பள்ளியில் படிக்கின்ற நாளில் இருந்தே நான் இப்படித்தான் உள்ளேன். எனக்கு கணக்கு வராது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றால் நல்லது. முன்னேறாவிட்டால் இந்த உலகம் ஒன்றும் அழிந்துவிடாது.
இவ்வாறு தோனி கூறினார். சிஎஸ்கே அணி தனது 12-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வரும் 12-ம் தேதி எதிர் கொண்டு விளையாடவுள்ளது.
இன்றைய ஆட்டம்
லக்னோ – குஜராத்
நேரம்: இரவு 7.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்