IPL 2022 | டேனியல் சாம்ஸ் ஃபினிஷிங் – ராஜஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதித்த மும்பை | Mumbai Indians won by 5 wickets against rajastan

Share

மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனின் 44-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா, பவுலிங் தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணிக்காக பட்லர் மற்றும் தேவ்தத் படிக்கல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பவர்பிளே ஓவர் முடிவதற்குள் முதல் விக்கெட்டை இழந்தது ராஜஸ்தான். படிக்கல் 15 ரன்களில் அவுட்டானார்.

தொடர்ந்து வந்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து அவுட்டானார். களத்தில் இருந்த பட்லர் மற்றும் மிட்செல் ரன் சேர்க்க தடுமாறினர். மிடில் ஓவர்களில் ராஜஸ்தான் அணி மொத்தம் 62 ரன்கள் தான் எடுத்தது. கடைசி ஐந்து ஓவர்களில் 56 ரன்களை சேர்த்தது. 16-வது ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்களை விளாசி இருந்தார் பட்லர். அவர் 67 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அஸ்வின், 9 பந்துகளில் 21 ரன்களை எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்தது ராஜஸ்தான். மும்பை அணி சார்பில் மெரிடித், ஹிருத்திக் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். டேனியல் சாம்ஸ் மற்றும் கார்த்திகேயா தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

இதனையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோகித் சர்மா, இஷான் கிஷன் இணை தொடக்கம் கொடுத்தது. நிலைத்து நின்று ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மாவை 3-வது ஓவரிலேயே வீழ்த்தினார் ரவிசந்திரன் அஸ்வின். 2 ரன்களில் அவர் நடையைக் கட்டினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் இஷான் கிஷனுடன் கைகோர்த்தார். ஆனால், 26 ரன்களுடன் 6-வது ஓவரில் இஷான் கிஷன் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

15 ஓவர் முடிவில் மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் சேர்த்திருந்தது. அடுத்த ஓவரிலேயே திலக் வர்மா 35 ரன்களுடன் வெளியேற, இறுதி ஓவரில் பொல்லார்டும் 9 ரன்களில் நடையைக் கட்டினார். இறுதி ஓவரில் டேனியல் சாம்ஸ் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வென்று தனது முதல் வெற்றியை மும்பை இந்தியன்ஸ் அணி பதிவு செய்துள்ளது.

ராஜஸ்தான் தரப்பில், போல்ட், பிரஷித் கிருஷ்ணா, அஸ்வின், சாஹல், குல்தீப் சென் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com