ஐபிஎல் 53வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி 75 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
177 ரன்கள் என்ற இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு டாப் ஆர்டர் மிகப்பெரிய சரிவை எதிர்கொண்டது. கடந்த இரண்டு போட்டிகளாக பவுலிங்கில் மிரட்டி வரும் லக்னோ பவுலர் மொஹ்சின் கான் இம்முறை ஓப்பனிங் ஓவரையே சிறப்பாக வீசினார். இன்னிங்ஸின் முதல் ஓவரை தொடங்கி வைத்த அவர், அதை மெய்டனாக வீசியதுடன் தமிழக வீரர் பாபா இந்திரஜித் விக்கெட்டையும் எடுத்து கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அப்போது ஆரம்பித்தது சரிவு. இதன்பின் வந்த கொல்கத்தாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஆரோன் பின்ச் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் எடுத்தார். மற்றபடி ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங் என அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்த ஓவர்களில் நடையைக்கட்டினர். இதனால் 25 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே 4 விக்கெட்களை இழந்திருந்தது கொல்கத்தா. ஆண்ட்ரே ரஸ்ஸல் மட்டுமே அந்த அணியில் ஆறுதல் அளிக்கும்படி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 19 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தபோது அவரும் அவுட் ஆக, அதன்பின் வந்தவர்கள் லக்னோ அணியின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் 14.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது படுதோல்வி அடைந்தது கொல்கத்தா அணி.
75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்ற லக்னோ அணிக்கு ஆவேஷ் கான் மற்றும் ஹோல்டர் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர்.
லக்னோ இன்னிங்ஸ்: டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, லக்னோ அணிக்கு குயின்டன் டிகாக், கே.எல்.ராகுல் இணை தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரிலேயே கே.எல்.ராகுல் விக்கெட்டாகி வெளியேறினார். ஒருபுறம் குயின்டன் டீ காக் அதிரடி காட்ட, தீபக் ஹூடா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 50 ரன்கள் சேர்த்திருந்த டி காக் 7-வது ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி நடையைக் கட்டினார்.
அடுத்து தீபக் ஹூடா 41 ரன்களிலும், குருணால் பாண்ட்யா 25 ரன்களிலும் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து 3 சிக்ஸர்களை விளாசிய மார்கஸ் ஸ்டோனிஸ் 28 ரன்களிலும், ஜேசன் ஹோல்டர் 13 ரன்களிலும், நடையைக் கட்டினர். ஆயுஷ் படோனி 13 ரன்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். துஷ்மந்த சமீர ரன் எதுவும் எடுக்காமல் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 176 ரன்களை சேர்த்தது. கொல்கத்தா அணி தரப்பில் ரஸல் 2 விக்கெட்டுகளையும், டிம் சௌதி, ஷிவம் மாவி, சுனில் நரேன் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.