புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது அறிந்தும் தைரியமாக கடலுக்குள் சென்று முத்தெடுத்த கதைதான் 2011-ம் ஆண்டு ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் நடந்தது. ஒட்டுமொத்த அரங்கமும் கெயில் என்ற கரீபிய புயலைக் கண்டு அஞ்சி நடுங்கி கொண்டிருக்க சென்னை அணி மட்டும், பரபரப்பான இறுதிப் போட்டியில் மிக எளிதாக அவரை சமாளித்து கோப்பையைக் கைப்பற்றியது. உலகக் கோப்பை வென்ற கையோடு ஐ.பி.எல் கோப்பையைக் கைப்பற்றித் தன்னுடைய முத்திரையை மிகவும் ஆழமாக உலக கிரிக்கெட்டில் தோனி பதித்த தினம் இன்று.
2011-ம் ஆண்டு ஐ.பி.எல் புதிய வடிவத்துடனே தொடங்கப்பட்டது. புதிய வெற்றிக்கோப்பை, இரண்டு புதிய அணிகள், அரையிறுதி ஆட்டங்களுக்கு பதிலாக பிளே-ஆப்ஸ் வரைமுறை என அத்தனையும் ஐ.பி.எல் களத்திற்கு அத்தனையும் புதியவை. இத்தனை மாற்றங்களுக்குப் பிறகும் இத்தொடரில் ஒன்று மட்டும் மாறவில்லை அதுதான் சென்னை அணியின் ஆதிக்கம். 2010-ம்- ஆண்டில் ஐ.பி.எல் வெற்றி, 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை, 2010 சாம்பியன்ஸ் லீக் தொடர் என்று வரிசையாக வெற்றிகளை அடுக்கிக் கொண்டே இருந்த தோனி, 2011-ம் ஆண்டு தொடரிலும் பிளே-ஆப்ஸ் சுற்றுக்குள் கால் எடுத்து வைத்தார்.