எதிராளியின் வியூகங்களை முன்னரே அறிந்து நகர முடியாதபடிக்கு திருப்பித் தாக்கும் போர் வீரர்களுக்கு ஒப்பான தீரத்தையே நேற்று இரு அணிகளின் வேகப்பந்து வீச்சாளர்களும் வெளிப்படுத்தியிருந்தனர்.
பௌலர்களின் ஆட்டம் என்று சொல்வதற்கான காரணத்தை டாஸிலிருந்தே உணர முடிந்தது. தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் இந்திய பேட்டர்கள் சரிந்து விழுந்தனர். இப்படி ஒரு சொதப்பல் நடக்கக்கூடும் என முன்பே அனுமானித்ததால்தான் அக்சர் படேலை பென்ச்சில் வைத்துவிட்டு தீபக் ஹூடாவை அழைத்து வந்து ரோஹித் சர்மா பேட்டிங் ஆர்டரை இன்னும் வலுவாக நீட்சியடைய வைத்திருந்தார். திட்டமெல்லாம் ஓகேதான்! ஆனாலும் ரோஹித்தின் படையால் அனுமானித்த வீழ்ச்சியை நிகழவிடாமல் தடுக்க முடியவில்லை.
பர்னல் ஓவர் தி விக்கெட்டில் வந்து வீச முதல் ஓவரையே ராகுல் மெய்டனாக்கிவிட்டார். மன்னிக்கவும்.. இந்த வாக்கிய கட்டமைப்பே தவறு. ராகுல் ரொம்பவே தற்காப்பாக யோசிக்க பர்னல் முதல் ஓவரையே மெய்டனாக்கிவிட்டார்! இதுதான் சரியானதாக இருக்கும்.
ரபாடாவின் ஷார்ட் பிட்ச் டெலிவரியில் சிக்சருடன்தான் ரோஹித் ரன் கணக்கையே தொடங்கினார். ரபாடாவை சமாளித்த ரோஹித்தால் இங்கிடியை சமாளிக்க முடியவில்லை. வீரியமாக வந்து மோதிய ஷார்ட் பாலை அப்படியை மடக்கி அடிக்க முற்பட்டு இங்கிடியிடமே கேட்ச் ஆனார் ரோஹித். அதே ஓவரின் இன்னொரு ஷார்ட் பாலில் ராகுலும் காலி!
4 பந்துகள் சரியாக இலக்கை எட்டியது. மீதமுள்ள 6 பந்துகளும் அந்த 4 பந்துகள் இலக்கை எட்டுவதற்கான ஆயத்த வேலைகளை செய்து கொடுத்திருந்தது. பர்னலின் ஆங்கிள்கள், நோர்கியாவின் வேகம் + பவுன்ஸ் அத்தனையுமே இந்திய அணியை திணறடித்திருந்தது.
தென்னாப்பிரிக்க பௌலர்கள் ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களை ஒரு ஆயுதமாக எடுத்திருக்க, இந்திய பௌலர்கள் ஸ்விங்கை பெரும் ஆயுதமாக பயன்படுத்தியிருந்தனர். குட்லெந்தில் கொஞ்சம் ஃபுல்லாக வீசி பந்தை மூவ் செய்திருந்தனர்.