ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது. புதிதாக உள்ளே வந்த கான்லி, ஷமியின் பந்தில் ஆரம்பத்திலேயே அவுட் ஆனார். ஆனால், எதிர்பார்த்ததைப் போலவே ஹெட் கொஞ்சம் பயமுறுத்தினார்.
எப்போது இந்திய அணிக்கு எதிராக ஆடினாலும் மிகச்சிறப்பாக ஆடுவார். அதனால் சமீபமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி என்றாலே ஹெட்டின் விக்கெட்டை முதலில் வீழ்த்த வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கமாக இருந்திருக்கிறது.
அந்தவகையில், இன்றைய போட்டியில் ஹெட்டை 39 ரன்களுக்குள்ளாகவே இந்திய அணி வீழ்த்தியிருக்கிறது. இன்றைய போட்டியிலுமே ஹெட் அபாயகரமாகத்தான் ஆடினார். ஷமி, ஹர்திக் என முதல் ஸ்பெல்லை வீசிய இருவரின் ஓவரிலுமே ஹெட் அதிரடியாக ஆடினார். ஹர்திக் பாண்ட்யாவின் ஓவரில் மட்டும் 5 பவுண்டரிக்களை அடித்தார். ஷமியின் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்தார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நன்றாக ஆடுகிறார் என்பதால் ரோஹித் சர்மா சீக்கிரமே ஸ்பின்னர்களை அறிமுகப்படுத்தினார்.
6 வது ஓவரிலேயே குல்தீப் உள்ளே வந்தார். அவரின் ஓவரிலும் ஹெட் சிக்சரை பறக்கவிட்டார். ஹெட் மீண்டும் ஒரு மிரட்டல் இன்னிங்ஸை ஆடப்போகிறாரோ எனத் தோன்றியது. ஆனால், 9 வது ஓவரில் வருண் உள்ளே வந்தார். அந்த ஓவரின் முதல் பந்தை ஸ்மித் சிங்கிள் எடுக்க, இரண்டாவது பந்தில் ஹெட் ஸ்ட்ரைக்கில் இருக்கிறார். ஹெட்டுக்கு வருண் வீசும் முதல் பந்து. அந்த முதல் பந்தையே இறங்கி வந்து பெரிய சிக்சராக்க முயல்கிறார் ஹெட். ஆனால், லாங் ஆஃபில் கில்லிடம் கேட்ச் ஆனார். 33 பந்துகளில் 39 ரன்களை எடுத்து ஹெட் அவுட். இந்தியாவுக்கான மிகப்பெரிய அபாயம் ஓய்ந்தது.