நிதானம் காட்டிய நுவனிது தனது அறிமுக ஒருநாள் போட்டிலேயே தனது அரைசதத்தை 21வது ஓவரில் பதிவுச் செய்தார். ஆனால் என்ன, அடுத்த 22வது ஓவரை அக்ஸர் வீச, முதல் பந்திலேயே அசலங்காவுடனான தவறான தகவல் பரிமாற்றம் காரணமாக ரன் அவுட் ஆனார். நல்ல முறையில் செட்டிலான பின்னர் தேவையற்ற முறையில் அவுட். 22 ஒவர் முடிவில் இலங்கை 122/4 என ஸ்கோர் இருந்தது. 23வது ஓவரில் குல்தீப் தனது ஐந்தாவது பந்தில், முந்தைய போட்டியில் சதம் விளாசிய ஷனாகா (கேப்டன்) விக்கெட்டை வீழ்த்த, போட்டியில் இந்திய ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. அடுத்தடுத்த விக்கெட், ரன்ரேட் தடுமாற்றம் எனத் தள்ளாடியது இலங்கை அணி. ஹசரங்கா, கருணரத்னே, துனித் சிறிது ரன்கள் தேற்றினாலும், யாரும் நிலைத்து நிற்கவில்லை.
இந்தியாவின் வேகப்பந்தில் வேகம் இழந்து, சுழல் பந்தில் சுருண்டுவிட்டது, இலங்கை அணி என்பதே நிதர்சனம். அதேபோல், இந்திய அணியின் ஃபீல்டிங்கும் அருமை!
கடந்த போட்டியில், கோலி – ரோஹித் பேட்டிங் அற்புதமாக இருந்த நிலையில், இன்றும் பெரிய வாணவேடிக்கை நிகழும் என எண்ணியவர்களுக்கு ஏமாற்றம்தான். இலங்கை அணியின் அசத்தல் பந்துவீச்சு, இந்தியாவை ஆட்டம் காண வைத்துவிட்டது. ரோஹித் – கில் இணை ஆட்டத்தைத் தொடங்கியது. அவர்கள் நல்ல தொடக்கத்தைத் தந்தாலும் அதைத் தொடர தவறிவிட்டனர். 5வது ஓவரின் கடைசி பந்தில் கருணரத்னே ரோஹித்தின் விக்கெட்டை எட்ஜ் ஆக்கி வீழ்த்தினார். 6வது ஓவரில் நன்கு ஆடிய கில், முதல் இரண்டு பந்தையும் பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால், அடுத்த பந்தும் அவசரம் காட்ட அவுட்டாகி வெளியேறினார்.