ஐ.பி.எல் தொடர் பரபரப்பாக நடந்து முடிந்திருக்கும் சூழலில் இந்திய வீரர்கள் மீண்டும் சர்வதேச தொடர்களுக்கு திரும்பியிருக்கின்றனர்.
கடந்த டி20 உலகக்கோப்பை தொடர் இந்திய அணிக்கு ஒரு கொடுங்கனவாக மாறிப் போயிருந்தது. அந்த உலகக்கோப்பைக்கு ஒரு சரியான செட்டிலான அணியை அழைத்துச் செல்லாதது இந்திய அணி செய்த மிகப்பெரிய தவறாக இருந்தது. அந்த தவற்றைக் களைந்து ஒவ்வொரு இடத்திற்குமான பொருத்தமான வீரர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கான சரியான பேக்-அப் வீரர்களையும் தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு இந்திய அணிக்கு இருக்கிறது.
பேக்-அப் வீரர்கள் என்கிற இந்த இடத்திலிருந்தே இந்தத் தொடர் கொஞ்சம் கூடுதல் முக்கியத்துவத்தை பெறுகிறது. நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு இந்தத் தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொடருக்கான கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த கே.எல்.ராகுலும் கடைசி நேரத்தில் காயம் காரணமாக தொடரிலிருந்தே விலகிவிட்டார். குல்தீப் யாதவும் காயத்தினால் ஒதுங்கியிருக்கிறார்.
இவர்களெல்லாம் இல்லாமல் ரிஷப் பண்ட் தலைமையில் பெரும்பாலும் இரண்டாம் கட்ட வீரர்களை உள்ளடக்கிய ஓர் அணியே இந்தத் தொடரில் களமிறங்க இருக்கிறது. இந்தத் தொடரில் ஆடும் வீரர்களில் எத்தனை பேருக்கு உலகக்கோப்பையில் ப்ளேயிங் லெவனில் இடம் கிடைக்கும் என்பது தெரியாது.
ஆனால், இந்திய அணி வலுவான வீரர்களை பென்ச்சில் வைத்திருக்க வேண்டும் என விரும்பும். எனவே, உலகக்கோப்பைக்கான அந்த முழுமையான அணியில் இந்தத் தொடரில் ஆடும் சில இளம் வீரர்களுக்கும் இடம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
கே.எல்.ராகுல் விலகிவிட்டதால் ஓப்பனிங்கில் பெரிய குழப்பம் எதுவுமின்றி ருத்துராஜ் கெய்க்வாட்டும் இஷன் கிஷனுமே இறங்குவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. இருவருமே தங்களை நிரூபித்து காட்ட வேண்டிய இக்கட்டான சூழலில் இருக்கின்றனர். சுமாரான ஐ.பி.எல் சீசனுக்கு பிறகு இருவரும் எப்படி பெர்ஃபார்ம் செய்யப்போகிறார்கள் என்னும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
கடந்த உலகக்கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு ஹர்திக் பாண்டியாவும் பிரதான காரணமாக இருந்தார். காயங்களினால் பந்துவீச முடியாமல் அவதிப்பட்டார். பேட்டிங்கிலும் ஃபார்ம் அவுட் ஆகியிருந்தார். ஆனால், இதெல்லாம் சில மாதங்களுக்கு முன்புதான்.