பெரிய இலக்கைத் துரத்துகையில் விக்கெட்டுகள் வேகத்தடை மட்டுமல்ல, அதி அபாய வளைவும்கூட. ஆனால், எதிர்ப்பதமாக நங்கூரம் பாய்ச்சும் பார்ட்னர்ஷிப்கள்தான் அணியை மேடேற வைக்கும் முக்கியக் காரணி. வான் டர் டஸன் – மில்லர் இணை, இதைத்தான் செய்தது. சரியாக மூன்று ஓவர்கள், தங்களை நிலைநிறுத்த எடுத்துக் கொண்டனர். அந்த இடைவெளியில் 15 ரன்கள் மட்டுமே சேர்ந்தன. முடிவில் ஹர்சல் ஓவரில் (12), யார்க்கரை பவுண்டரியாக்கி மில்லர் ஆரம்பித்தார். அங்கிருந்து எந்த பௌலரைப் பார்த்தாலும் அடிப்போம் என்ற மைண்ட் செட்டுக்கு மாறிவிட்டனர் இவ்விருவரும். 22 பந்துகளில் மில்லரின் அரைசதம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வந்து சேர்ந்து, அவரது ஐபிஎல் ஃபார்ம் அப்படியே தொடர்வதைக் காட்டியது.
அவருக்குத் துணையாக இன்னொரு முனையில் இருந்த வான் டர் டஸனும் மெதுவாகத் தொடங்கினாலும், போகப் போக கியரை மாற்றி ரன் வேட்டையாடி 37 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதிலும் வேகப்பந்து வீச்சாளர்களைத் திறம்பட எதிர்கொண்டார். வெறும் 29 பந்துகளில் 28 ரன்களை எடுத்திருந்தவர், அடுத்த 17 பந்துகளில் 47 ரன்களைக் குவித்தார். 16-வது ஓவரில் ஸ்ரேயாஸ் கோட்டைவிட்ட அவரது கேட்ச்தான் மேட்சையே மாற்றியது.
இவர்களது இந்த இரண்டு அரைசதங்கள் மட்டுமல்ல, டெத் ஓவரில் ஹர்சல் ஒரே ஓவரில் தந்த 22 ரன்களும் போட்டியைக் கிட்டத்தட்ட முடித்து வைத்தன. அதற்கு முன்னதாக 14-ஆக இருந்த தேவைப்படும் ரன்ரேட், அந்த ஓவர் முடிவில் 18 பந்துகளில் 34 ரன்களே தேவை எனச் சுலபமாக வந்து நின்றுவிட்டது. வேறெந்த அதிசயத்தையும் இந்திய பௌலர்களால் இறுதியில் நிகழ்த்த முடியாமல் போக ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா.
ஃப்ளாட் பிட்ச், செட்டில் ஆகிவிட்ட பேட்ஸ்மென்கள், அதிலும் ஸ்பெஷலிஸ்ட் ஃபினிஷர்கள் என எல்லாமே, தென்னாப்பிரிக்காவுக்குச் சாதகமாகவே நகர்ந்தது. பிரிட்டோரியஸ் பவர்பிளேயில் ஏற்றிய ரன்ரேட்டும், மில்லர் – வான் டர் டஸனின் அதிரடி ரன்வேட்டையும் இந்த வெற்றியை தென்னாப்பிரிக்காவுக்குப் பரிசளித்தது. இந்தியாவுக்கு எதிராக ஓர் அணியின் அதிகபட்ச டி20 ரன் சேஸும் இதுதான். தங்களது பவர்பிளேயில் வந்த டாட் பால்களையும் ரன்களாக்கி 240 ரன்களைத் தாண்டியிருந்தால் இந்தியா வெற்றியைச் சுவைத்திருக்கலாம்.
தொடர்ந்து 12 டி20 போட்டிகளில் வெற்றி பெற்றதோடு, 13-வது போட்டியையும் வென்று சாதனை படைக்க வேண்டுமென்று கனவு கண்ட இந்திய அணி தோற்றிருக்கிறது. தென்னாப்பிரிக்கா அந்தத் தொடர் வெற்றிப் பயணத்தை முடித்து வைத்துள்ளது.