முன்னாள் வீரர்கள் இடம்பெற்ற இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் கலந்துகொள்ளும் WCL (World Championship of Legends) டி20 தொடர் ஜூலை 18 முதல் நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் லீக் சுற்றுகள் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.
இவ்வாறிருக்க, ஜூலை 20-ம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையே போட்டி திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய அணி, பாகிஸ்தான் உடனான போட்டியில் அவசியம் விளையாட வேண்டுமா? என்ற விமர்சனங்கள் தொடர்ச்சியாக எழுந்த வண்ணம் இருக்கிறது.
ஜூலை 20-ம் தேதி போட்டிக்கு முன்னதாக ஷிகர் தவான், ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான், யூசுஃப் பதான் ஆகிய முன்னாள் வீரர்கள் பாகிஸ்தானுடனான போட்டியில் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியை ரத்து செய்வதாக WCL போட்டி நிர்வாகம் அறிவித்தது.
மேலும், “இப்போட்டியின் திட்டமிடலால் பலரின் உணர்வுகளைப் புண்படுத்தியிருக்கிறோம்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திவிட்டோம்.” என்று WCL போட்டி நிர்வாகம் மன்னிப்பு கேட்டு விளக்கமளித்து.