பட மூலாதாரம், Getty Images
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
நடப்பு டி20 உலகக் கோப்பையில் லீக் ஆட்டம் ஒன்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன.
கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா பந்து வீச்சை தேர்வு செய்வதாக கூறினார். இன்றைய டாஸின் போதும் இரு கேப்டன்களும் கைகுலுக்கவில்லை.
மீண்டும் அபிஷேக் ஷர்மா
இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடாத அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா மீண்டும் இடம் பிடித்துள்ளார்.
இந்தியாவின் பிளேயிங் லெவன் விவரம் பின் வருமாறு:
இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா
பாகிஸ்தான் அணியில் உஸ்மான் தாரிக்
பாகிஸ்தானின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம் பின்வருமாறு, சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், சல்மான் ஆகா (கேப்டன்), பாபர் அசாம், ஷதாப் கான், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் ஷா அப்ரிடி, உஸ்மான் தாரிக், அப்ரார் அகமது
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும்.
பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த கடைசி 5 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 7 முறை இந்திய அணியும் ஒரு முறை பாகிஸ்தான் அணியும் வென்றுள்ளன. ஆனால் பாகிஸ்தான் அணியின் சமீபத்திய செயல்பாடு மற்றும் வீர்களின் ஃபார்ம் அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.
ஆரம்பத்தில் இந்த போட்டிக்கான அனுமதியை மறுத்த பாகிஸ்தான் அரசு, பல்வேறு ஊகங்களுக்குப் பிறகு, இறுதியில் முடிவை மாற்றிக் கொண்டு, தனது அணி உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட அனுமதி அளித்தது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியபோது, இரு அணிகளின் மோதலை விட இரு நாடுகளுக்கு இடையிலான மோசமான உறவுகள் குறித்துதான் அதிகம் விவாதிக்கப்பட்டது என்பதும் உண்மைதான்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு