IND vs ENG ஆகாஷ் தீப், ஜெய்ஸ்வால் அசத்தல்: இந்தியா ஐந்தாவது டெஸ்டில் வென்று தொடரை சமன் செய்யுமா?

Share

இந்தியா - இங்கிலாந்து, ஆகாஷ் தீப், ஜெய்ஸ்வால், சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் ஆகாஷ் தீப்

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. ஸ்டோக்ஸ், பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத போதும், இரு அணிகளும் சரிக்கு சமமாக சண்டையிடுகின்றன. இன்றைய தினம் தொடரின் முடிவு தெரிந்துவிடும்.

ஓவல் டெஸ்டின் இரண்டாம் நாளில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, மூன்றாம் நாளிலும் தன் பிடியை விடாமல் பார்த்துக்கொண்டது. நைட் வாட்ச்மேனாக முதல் நாளில் களம்புகுந்த ஆகாஷ் தீப், நேற்று உடும்பு போல விக்கெட்டை இறுக்கிப் பிடித்துக்கொண்டு விளையாடி, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் நிம்மதியை கெடுத்தார். கிடைக்கும் ஒவ்வொரு ரன்களும் அணிக்கு லாபம் என்று, ஜெய்ஸ்வாலும் அவருக்கு அதிக ஸ்ட்ரைக் கிடைக்கும்படி பார்த்துக்கொண்டார்.

இரண்டாம் நாளின் முதல் ஓவரிலேயே, பெத்தேல் பந்தில் பவுண்டரி அடித்து அதிரடியை ஆரம்பித்த ஆகாஷ் தீப் ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. உயிரைக் கொடுத்து வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய பந்துகளை, அலட்சியமாக ஸ்லிப் பிராந்தியத்திலும் மிட் விக்கெட் திசையிலும் பறக்கவிட்டு ரன் சேர்த்தார். ஆகாஷ் தீப் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை இங்கிலாந்து பீல்டர்கள் சொல்லிவைத்தது போல போட்டிப் போட்டுக்கொண்டு தவறவிட்டனர்.

ஆகாஷ் தீப் மீது இங்கிலாந்து அணியின் பார்வை திரும்பியதை பயன்படுத்திக் கொண்டு, ஜெய்ஸ்வால் சத்தமின்றி சதத்தை நோக்கி நகர்ந்தார். ஜெய்ஸ்வால் பெரிதாக எந்த பரீட்சார்த்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. தனக்கு தோதான பந்துகள், தனக்கு விருப்பமான திசையில் கிடைக்கும் போது நம்பிக்கையுடன் பேட்டை விளாசினார். ஒரு நல்ல தொடக்க பேட்டருக்கு, பந்தின் வேகத்தை எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வித்தை தெரிந்திருக்க வேண்டும். கழுத்தை குறிவைத்து வீசப்பட்ட பந்துகளை ரொம்பவும் லாவகமாக தேர்ட் மேன் திசையில் அப்பர் கட் விளையாடினார்; தவறான லைனில் வீசப்பட்ட பந்துகளை பாயிண்ட் திசையிலும் சீவிவிட்டார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com