புதுடெல்லி: வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியை 86 ரன்களில் வென்றுள்ளது இந்திய அணி. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-0 என முன்னிலை.
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா வென்றது. இந்த நிலையில் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வங்கதேசம் தோல்வியை தழுவி உள்ளது.
டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது.
222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேச அணி விரட்டியது. இருப்பினும் அந்த அணி 100 ரன்களை எட்டுவதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மஹ்மதுல்லா மட்டுமே களத்தில் நிலைத்து நின்று ஆடினார். 39 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது வங்கதேசம். இதன் மூலம் 86 ரன்களில் இந்தியா போட்டியில் வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் நிதிஷ் ரெட்டி மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அர்ஷ்தீப், வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா, மயங்க் யாதவ், ரியான் பராக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.
முன்னதாக, முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா – சஞ்சு சாம்சன் களம் புகுந்தனர். 2-வது ஓவரில் சஞ்சு சாம்சன் 10 ரன்களுக்கு அவுட். 3-வது ஓவரில் அபிஷேக் சர்மா 15 ரன்களுக்கு போல்டு. 6-வது ஓவரில் சூர்ய குமார் யாதவ் 8 ரன்களுக்கு விக்கெட் என நிலைமை அதள பாதாளத்துக்கு சென்றது. 7 ஓவர்கள் முடிவில் 51 ரன்களை சேர்த்த இந்திய அணி 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்தது.
அப்போது தான் மீட்பர்களாக களமிறங்கினர் நிதிஷ் ரெட்டி – ரிங்கு சிங் இணை. 10-வது ஓவரில் மட்டும் 3 சிக்சர்களை பறக்க விட்டு நம்பிக்கை கொடுத்தனர். 27 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார் நிதிஷ் ரெட்டி. சிறப்பாக விளையாடிய அவரை முஸ்தஃபிசுர் ரஹ்மான் 14-வது ஓவரில் அவுட்டாக்கினார். 7 சிக்சர்களை விளாசி 34 பந்துகளில் 74 ரன்களுடன் வெளியேறினார் நிதிஷ். அடுத்து 26 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டிய ரிங்கு சிங், 17-வது ஓவரில் 53 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து அவுட்டாகி பெவிலியின் திரும்பினார்.
ஒருபுறம் ஹர்திக் பாண்டியா ரன்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட, மறுபுறம் ரியான் பிராக் அடுத்தடுத்து 2 சிக்சர்கள் விளாசினார். ஆனால் அதில் ஒன்று கேட்சானது சோகம். 15 ரன்களில் கிளம்பினார் ரியான். அடுத்து ஹர்திக் பாண்டியா 32 ரன்களுக்கு விக்கெட்டானார். தொடர்ந்து வருண் சக்கரவர்த்தி டக் அவுட். அர்ஷ்தீப் சிங் வந்த வேகத்தில் சிக்ஸர் விளாச அடுத்து விக்கெட்டாகி வெளியேறினார். மயங் யாதவ் 1 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் ரன் எதுவும் எடுக்காமல் இருந்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 221 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் ரிஷாத் ஹூசைன் 3 விக்கெட்டுகளையும், தஷ்கின் அகமது, தன்ஜிம் ஹசன், முஸ்தஃபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.