டிராவில் முடியும்பட்சத்தில் இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக ஆடவிருக்கும் டெஸ்ட் தொடரை 3-0 என வெல்ல வேண்டும். அதற்கடுத்து 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் குறைந்தபட்சமாக 2 போட்டிகளையாவது கட்டாயம் வெல்ல வேண்டும். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஒரு போட்டி பிசகினால் கூட அழுத்தம் இன்னும் கூடிவிடும்.
அப்படியிருக்க வங்கதேசத்துக்கு எதிரான இந்தப் போட்டி இந்தியாவுக்கு ரொம்பவே முக்கியம். வெற்றிபெற அதிக வாய்ப்புள்ள இந்த போட்டியை அநாமத்தாக இந்தியா டிரா செய்யும் சூழலுக்கு தள்ளப்படுவதுதான் ரசிகர்களுக்கு வேதனையை கொடுத்திருக்கிறது. ஒரு சொட்டு மழை இல்லாத போதும் மூன்றாம் நாளில் ஒரு பந்தை கூட வீச முடியாத அளவுக்கு மைதானத்தின் வடிகால் அமைப்பு மோசமாக இருந்ததுதான் பிரச்னை. மதியத்துக்கு மேல் வெயிலே வந்துவிட்டது. அப்படியிருந்தும் அவுட் பீல்டில் தேங்கியிருந்த மழை நீரை வடிய வைக்க முடியவில்லை. அந்த அளவுக்கு மோசமான சிஸ்டத்துடன்தான் க்ரீன் பார்க் மைதானம் செயல்பட்டு வருகிறது.
இதே உத்திரபிரதேசத்தில் நொய்டாவில் ஆப்கானிஸ்தானும் நியூசிலாந்தும் மோதும் ஒரு டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டது. அந்தப் போட்டியும் 5 நாட்களிலும் ஒரு பந்து கூட வீசப்படாமல் நிறுத்திக்கொள்ளபட்டது. மழை நின்ற பிறகும் கூட மைதானத்திலிருந்து நீரை வெளியேற்றும் வசதிகள் அங்கே இல்லாததால் மைதான ஊழியர்கள் திணறிவிட்டனர். ஆப்கானிஸ்தான் வேண்டி விரும்பி இந்த மைதானத்தில் ஆட வந்திருந்தாலும் மைதானத்தின் வசதிகளை பார்த்து இரண்டு அணியின் பயிற்சியாளர் குழுவுமே கடும் அப்செட் ஆகியிருந்தனர்.