கான்பூர்: இந்தியாவுக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேசம் 233 ரன்களை சேர்த்துள்ளது. மொமினுல் ஹக் 107 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு வங்கதேச அணி 107 ரன்களைச் சேர்த்து. மொமினுல் ஹக் 40 ரன்னுடனும், முஷ்பிகுர் ரஹிம் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து 2 மற்றும் 3வது நாட்களில் மழை பாதிப்பு காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் 4ஆவது நாளான இன்று மீண்டும் ஆட்டம் தொடங்கியது. முஷ்பிகுர் ரஹிம் 11 ரன்களில் போல்டானார். மொமினுல் ஹக் மட்டும் ஒருபுறம் நிலைத்து ஆட மறுபுறம் களமிறங்கிய, லிட்டன் தாஸ் 13, ஷகிப் அல் ஹசன் 9, மெஹிதி ஹசன் 20, தைஜுல் இஸ்லாம் 5, ஹசன் மஹ்மூத் 1 என பெரிய அளவில் ரன்களை சேர்க்காமல் ஆட்டமிழந்தனர். கடைசியாக கலீல் அகமது டக்அவுட்டாக 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேசம். இதில் மொமினுல் ஹக் மட்டும் நிலைத்து ஆடி 107 ரன்களை சேர்த்தார்.
இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், அஸ்வின், ஆகாஷ் தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.