இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகித்திருந்தது. இதனைத்தொடர்ந்து இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை முழுவதுமாகக் கைப்பற்றியது. சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார்.
இந்நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகியோர், உன்னுடைய வழியில் விளையாடுமாறு சுதந்திரம் கொடுத்ததே அதிரடியாக ரன்கள் குவிக்கக் காரணம் என்று ஜெய்ஸ்வால் கூறியிருக்கிறார். ஆட்டநாயகன் விருதை வென்ற பின் பேசிய ஜெய்ஸ்வால், “என்னுடைய அணிக்காக என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தேன். சென்னையில் விளையாடியதற்கும், கான்பூரில் விளையாடியதற்கும் சூழ்நிலை சற்று வித்தியாசமாக இருந்தது.
அதில் என்னுடைய அணிக்காகச் சிறந்தவற்றைச் செய்ய என்னுடைய சிறந்த ஆட்டத்தைக் கொடுக்க முயன்றேன். ஒவ்வொரு ஆட்டமும் முக்கியம். நான் விரும்பும் வழியில் விளையாடுமாறு ரோஹித் பாய்யும் கௌதம் சாரும் சொன்னார்கள்.
நாம் சுதந்திரமாக விளையாடி கொஞ்சம் பெரிய ஸ்கோரை எடுக்க வேண்டும் என்று நாங்கள் பேசினோம். ஏனெனில் போட்டியை வெல்ல விரும்பிய நாங்கள் அதனை நோக்கித்தான் பயணித்தோம்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.