அதே மாதிரி ஒரு முறை சென்னை அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றுவிட்டு கூட்டாக செல்பி எடுக்கும் போது அந்தக் கூட்டத்தில் ஒருவராக டெல்லி அணியின் ஜெர்சியோடு பண்ட்டும் போஸ் கொடுத்திருப்பார். இப்படியான வேடிக்கையான விஷயங்களையெல்லாம் ஆட்டத்தில் பண்ட் எப்போதுமே செய்துகொண்டிருப்பார். ஸ்லெட்ஜ்ஜிங்கில் ஆஸ்திரேலியாவை மிஞ்ச முடியாது. ஆனால், 2020-21 பார்டர் கவாஸ்கர் தொடரின் போது ஸ்டம்புக்கு பின்னால் நின்று ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய வீரர்களை ஜாலியாக கலாய்த்த விதத்தை ஆஸ்திரேலிய வீரர்களே ரசித்தனர். அப்போதைய கேப்டன் டிம் பெய்ன் தன்னுடைய குழந்தைகளுக்கு பண்ட்டை பேபி சிட்டர் ஆக்கிய புகைப்படங்களும் அப்போது வைரலானது.
வேடிக்கையாக இப்படி செய்யக்கூடியவர் சில சமயங்களில் சீரியஸாக கோபமடைந்தும் சில விஷயங்களை செய்து மாட்டியிருக்கிறார். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டி ஒன்றின் முக்கியக் கட்டத்தில் நடுவர் நோ – பால் கொடுக்காததால் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் கடுப்பாகிவிடுவார். உடனே க்ரீஸில் ஆடிக்கொண்டிருந்த தன்னுடைய பேட்டர்களை மேற்கொண்டு ஆட வேண்டாமென கூறி பெவிலியனுக்கு அழைத்துவிடுவார். பயிற்சியாளர் குழுவிலிருந்த ஷேன் வாட்சன் இதெல்லாம் தவறு என வார்ன் செய்யவே மீண்டும் பேட்டர்களை உள்ளே அனுப்பியிருந்தார். பின்னால் இதற்காக ரிஷப் பண்ட் அபராதமும் கட்டினார்.
ரிஷப் பண்ட் மாதிரியான குணாதிசயம் கொண்ட நபர்கள்தான் பல சமயங்களில் கிரிக்கெட்டை சுவாரஸ்யமானதாக மாற்றிவிடுகின்றனர். ஆனால், இவர்கள் தங்களின் பொறுப்பையும் உணர்ந்து தவறான முன்னுதாரணமாக மாறிவிடாத நிலையிலிருந்தே வேடிக்கைகளை நிகழ்த்த வேண்டும்.