IND vs AUS 1st ODI | தூணாக நின்ற கே.எல்.ராகுல், கைகொடுத்த ஜடேஜா – ஆஸி.யை வீழ்த்தியது இந்தியா | india won the first ODI against Australia in 5 wickets differents

Share

மும்பை: கே.எல்.ராகுல், ஜடேஜா துணையுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று வாகை சூடியது. முதல் ஒருநாள் போட்டி இன்று மும்பையில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி மிட்செல் மார்ஸ், ட்ராவிஸ் ஹெட் இணை ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கம் கொடுத்தது. ஆனால் அது ஒன்றும் அவ்வளவு சிறப்பான தொடக்கமாக அமையவில்லை.

ட்ராவிஸ் ஹெட்டை (5) முஹம்மது சிராஜ் முதல் ஓவரிலேயே வெளியேற்றினார். அடுத்ததாக களத்திற்கு வந்த ஸ்டீவன் ஸ்மித் மிட்செல் மார்ஸுடன் கைகோத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 12 ஓவர் வரை தாக்குப்பிடித்த இந்த இணையை ஹர்திக் பாண்டியா பிரித்து வெளியேற்றினார்.

ஸ்மித் 22 ரன்களில் வெளியேற, நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் 81 ரன்களில் அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலிய அணி 129 ரன்களை சேர்த்தது. ஆனால், அதைத் தொடர்ந்து வந்த வீரர்கள் யாரும் சோபிக்காததால், விக்கெட்டுகள் சீட்டுக்கட்டாக சரிய 35.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா.

இந்திய அணி தரப்பில் முஹம்மது சமி, சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

189 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு இஷான் கிஷன் – சுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தது. 3 ரன்களில் இஷான் கிஷன் வெளியேற, அவரைவிட கூடுதலாக 1 ரன் எடுத்து 4 ரன்களில் நடையைக்கட்டினார் கோலி. 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. சூர்யகுமார் யாவத் ரன் எதுவும் எடுக்காமல் கிளம்ப, சுப்மன் கில் தன் பங்கிற்கு 20 ரன்கள் சேர்த்துவிட்டு பெவிலியன் திரும்பினார். இப்படியான வீரர்கள் யாரும் நம்பிக்கை கொடுக்காத நிலையில், 11 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 43 ரன்களை சேர்ந்திருந்தது இந்தியா.

இந்த துயரத்திற்கெல்லாம் முடிவுகட்ட களமிறங்கிய கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா இணை ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்தது. ஒருகட்டத்தில் ஹர்திக் 25 ரன்களுடன் வெளியேற, பொறுப்பாக ஆடிய கே.எல்.ராகுலுடன் ஜடேஜா கூட்டணி அமைத்து 39.5 ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்தனர். கே.எல்.ராகுல் 75 ரன்களுடனும், ஜடேஜா 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதன்மூலம் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருக்கிறது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் 3 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டோனிஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com