தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஓங்கிய நெதர்லாந்தின் கரத்தால் சூப்பர் 12-ல் ஜிம்பாப்வேவுடன் கடைசிப் போட்டியில் ஆடுவதற்கு முன்னதாகவே அரையிறுதிக்கு தேர்வாகி விட்டது இந்தியா. இருப்பினும், இந்தியா அரையிறுதியில் சந்திக்க வேண்டிய எதிரணியையும் நாளையும் தீர்மானிப்பதற்கான போட்டியாக ஜிம்பாப்வே உடனான இப்போட்டி மாறியது.
பேட்டிங் செய்து கடின இலக்கை ஜிம்பாப்வேக்கு நிர்ணயிப்பார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல, பவர்கட் ஆனதாகவே இந்திய பவர்பிளே ஓவர்கள் அமைந்தன. மெய்டனோடுதான் கே.எல் ராகுல் முதல் ஓவரையே தொடங்கி வைத்தார்.
பவர்பிளே ஓவர்களில் ஆடுவதென்றாலே மின்சாரக் கூண்டுக்குள் சிறை வைத்தது போலத்தான் ரோஹித்தின் அணுகுமுறை இருக்கிறது. இத்தொடரில் ஆடிய ஐந்து இன்னிங்ஸ்களில், 13 ஆவரேஜோடு, 89.7 ஸ்ட்ரைக்ரேட்டோடு, மொத்தமாகவே 52 ரன்களை மட்டுமே ரோஹித் எடுத்துள்ளார். ஒரு போட்டியில் மட்டுமே பவர்பிளேயில் பிழைத்திருக்கிறார். பேக் டு பேக் அரை சதத்தோடு ராகுல் கம்பேக் கொடுத்தாலும், அவரது டாட் பால்களால் விளையும் அழுத்தம், ரோஹித்துக்குள்ளும் கடத்தப்படுகிறது. போதாக்குறைக்கு அவரது புல் ஷாட் பலவீனமும் அவரது விக்கெட்டை வழக்கம் போல இப்போட்டியிலும் காவு வாங்கியது. 30-களிலேயே இத்தொடர் முழுவதும் உலவிக் கொண்டிருந்த பவர்பிளே ரன்கள் ஒரு வழியாக 46-ஐ இப்போட்டியில் எட்டியது என்பது மட்டுமே ஒரே ஆறுதல்.
மிடில் ஓவர்களில், ஜிம்பாப்வே தனது பிடியை இன்னமும் இறுக்கியது. 12 ஓவர்களுக்குள்ளேயே ஏழு பௌலர்களையும் பயன்படுத்தி விட்டனர். முதலில் ரன்களைக் கட்டுப்படுத்திய ஸ்பின்னர்கள், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை இக்கட்டிற்கு எடுத்துச் சென்றனர். சீன் வில்லியம்ஸ், ராசா வீழ்த்திய வலையில் வீழ்ந்து அடுத்தடுத்து கோலி, ராகுல், பண்ட் விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. மூன்று ஓவர்களில் வரிசையாக மூன்று விக்கெட்டுகள் வீழ, போட்டியின் திருப்புமுனையாக இது மாறுமென்ற தோற்றம் உருவானது. காரணம், 7 – 15 ஓவர்களில் மொத்தமே 61 ரன்களை மட்டுமே இந்தியா எடுத்திருந்தது.