அதுவும் இந்திய ஃபீல்டிங்கும் மார்க்ராமுக்கு மறுவாழ்வளித்துக் கொண்டே இருந்தது. ஒரு ஓவரில் கோலி கேட்ச் டிராப் செய்து அவரைக் காப்பாற்ற, அதற்கடுத்த ஓவரிலேயே தன் பங்கிற்கு ஒரு ரன் அவுட் வாய்ப்பைத் தவறவிட்டு ரோஹித்தும் மார்க்ராமைக் காப்பாற்றினார். இந்த இரண்டு தவறுகளுக்கு இந்தியா பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது. அஷ்வினைக் குறிவைத்து ஒரே ஓவரில் அவர்கள் அடித்த 17 ரன்களும் பிரஷரை இந்தியாவின் பக்கம் திருப்பிவிட்டன. மில்லர் – மார்க்ராமின் பார்ட்னர்ஷிப்பும் அதை உடைக்க முடியாமல் போனதும் இந்தியத் தரப்பைச் சறுக்க வைத்தது. ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்தது மட்டுமல்லாமல் சிங்கிளை டபிள்ஸாக மாற்றி அற்புதமாக ஆடியது இக்கூட்டணி.
இதில் இன்னொரு விந்தை, ஹூடாவை பார்ட் டைம் பௌலிங் ஆப்சனாகக் கருதி அணியில் எடுத்து, இறுதி வரை ஒரு ஓவர் கூடக் கொடுக்காததுதான். இதே தவற்றை இந்தியா ஆசியக் கோப்பையிலும் செய்திருந்தது. ஒருவேளை 18-வது ஓவரை அஷ்வினுக்குப் பதிலாக ஹூடாவிடம் கொடுத்துப் பார்த்திருந்தால் முடிவுகள் வேறு வகையில் நகர்ந்திருக்கலாம்.
இறுதி ஓவரில் ஆறு ரன்கள்தான் வேண்டும், களத்தில் மில்லர் நிற்கிறார் என்ற போதே போட்டியின் முடிவைக் கணிக்க முடிந்தது. பேக் டு பேக் பவுண்டரியோடு வெற்றிக் கோட்டைத் தொட்டார் மில்லர். 46 பந்துகளில் 59 ரன்கள்தான் என்றாலும் சரியான நேரத்தில் ஆட்டத்தின் வேகத்தை முடுக்கி, கியரை மாற்றி, அஷ்வினின் இரண்டு ஓவர்களை டார்கெட் செய்த இடத்தில்தான் மில்லர் தங்களது வெற்றியை உறுதி செய்தார். ஐந்து விக்கெட் வித்தியாசத்திலான வெற்றி தென்னாப்பிரிக்காவை டேபிளின் உச்சத்தில் அமர்த்தியுள்ளது.
சூர்யாவைத் தவிர அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்திருப்பினும் பௌலர்கள் இறுதி ஓவர் வரை ஆட்டத்தை எடுத்துச் சென்றதே பெரிய விஷயம்தான் என இந்தியா ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான். அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளால் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்த இந்தியாவைத் தட்டி எழுப்பி நிகழுலகத்திற்குக் கூட்டி வந்துள்ளது இந்தத் தோல்வி.
டாப் ஆர்டர் திணறல், குறிப்பாக பவர்பிளே தடுமாற்றம், டெய்ல் எண்டர்களை நம்ப முடியாதது, ஃபீல்டிங் குளறுபடிகள், இறுதி ஓவர் இழுபறிகள் என இருக்கும் எல்லா தவறுகளையும் சரி செய்ய வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது.