இந்திய அணியில் ஹர்ஷல் படேல் தனது பலமான ஸ்லோயர் பந்துகளில் இந்த முறை ரன்களை விட்டுக்கொடுத்தார். வேட் சென்ற போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் அந்த ஸ்லோயர் ஷார்ட் பிட்ச் பந்துகளை சிக்ஸர்களுக்கு விரட்டினார். ஆஸ்திரேலியா அணி பௌலிங்கில் அதிகப்படியான ஸ்லோயர் பந்துகளை உபயோகித்தனர். அது அவர்களுக்கு பலன் தரவில்லை. ரோஹித் சர்மாவுக்கு ஷார்ட் பிட்ச் பந்துகளையும் வீசினர். இது ரோஹித் தனது ஆதர்ச புல் ஷார்ட்களை ஆட வழி செய்தது.
இரு அணியிலும் ஸ்பின்னர்களான அக்ஸர் மற்றும் ஜாம்பா சிறப்பாகப் பந்து வீசினர். அக்ஸரின் 6.5 ரன்கள் என்ற எக்கனாமி ஆஸ்திரேலியா அணிக்குக் கூடுதல் ரன்கள் சேர்க்கும் வாய்ப்பை தவிர்த்தது. இந்தப் போட்டி குறைந்த ஓவர்கள் மட்டும் நடைப்பெற்றதால் பௌலர்கள் எக்கனாமி என்பது 10 ரன்களுக்கு மேல் இருக்கும் என்பது அனைவரும் யூகித்ததுதான்.
இந்திய அணி சேஸிங் செய்யும் போது சிறப்பாகவே செயல்படுகின்றனர் அதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால், ஸ்கோரை டிஃபண்ட் செய்வதில் இன்னமும் தடுமாறுகின்றனர். இந்தப் போட்டியில் சில பாசிட்டிவ் அம்சங்கள் உள்ளன. இதே போட்டியை டார்கெட்டை டிஃபண்ட் செய்து வென்றிருந்தால் இந்திய அணியின் பலம், பலவீனங்கள் குறித்து இன்னும் ஒரு தெளிவான பார்வை கிடைத்திருக்கும். ஆயினும், வெற்றி என்பது வெற்றிதான்.