வாந்தி, வயிற்றுப்போக்கு என திடீரென ஏற்படும் உடல் உபாதைகளால் உடனடியாக உடலில் குறைவது, நீர்ச்சத்து. நீர்ச்சத்து குறைவதால் பலவிதமான பிரச்னைகள் ஏற்படும் என்பதால், அதை சமன் செய்ய உடனடியாக ORS கரைசல் பருகுவது அவசியம். குறிப்பாக, குழந்தைகளுக்கு நீர் இழப்பு ஏற்படும் நேரங்களில், உப்பு – சர்க்கரை கரைசலான இந்த ORS கரைசல் உடனடியாகக் கொடுக்கப்பட வேண்டும்.

ORS (Oral Rehydration Solution) மருந்தகங்களில் கிடைக்கும். அதனை வாங்கிப் பருகலாம். அல்லது, வீட்டிலேயே எளிய முறையில் அதை தயார் செய்யலாம். அது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
* முதலில், கைகளை நன்றாக சோப் போட்டு கழுவ வேண்டும். அதேபோல, கரைசல் தயார் செய்யவிருக்கும் பாத்திரத்தையும் சுத்தமாகக் கழுவிவைத்துக்கொள்ள வேண்டும்.
* சுத்தமான தண்ணீர் – 1 லிட்டர், சர்க்கரை – 6 டீஸ்பூன்(1 டீஸ்பூன் = 5 கிராம்), தூள் உப்பு – அரை டீஸ்பூன் என இந்த அளவுகளில் எடுத்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும். நீர்ச்சத்து இழப்புக்கு ஆளானவருக்கு இதை அடிக்கடி பருகக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
* கரைசல் தயாரித்த 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். தேவைப்பட்டால், இதே முறையில் புதிய கரைசல் தயாரித்துக்கொள்ள வேண்டும்.
* கரைசலில் பரிந்துரைக்கு அதிகமாக கூடுதல் சர்க்கரை சேர்க்க வேண்டாம்.
* கரைசல் தயாரிக்க தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பால், பழச்சாறு, குளிர்பானங்களை எல்லாம் பயன்படுத்தக் கூடாது.

* ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்றார்போல, ORS கரைசலை எடுத்துக்கொள்ளும் அளவு மாறுபடும்.
* இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு அரை லிட்டர் வரை ORS பானம் கொடுக்கலாம்.
* 2 முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 1 லிட்டர் ORS கரைசல் கொடுக்கலாம்.
*10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 3 லிட்டர் ORS கரைசல் அருந்தலாம்.
* உடலில் ஏற்படும் நீரிழப்பை சமன் செய்ய ORS கரைசலை மட்டுமே சிகிச்சை என்று கொள்ளாமல், மேலும் நீர்ச்சத்து குறைந்துவிடாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இதை மேற்கொண்டு, தவறாமல், தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.