#Home Sickness Syndrome ஆபத்து: அறிகுறிகளும் தீர்வுகளும்… மருத்துவர் சொல்வதென்ன?

Share

பாலிவுட் நடிகர் அஜய் தேவகனின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகிய `ரன் வே 34’ என்ற இந்தி படத்தில் ‘Home Sickness Syndrome’ என்றொரு விஷயம் பேசப்படும். பெரும்பாலும் படிப்பிற்காகவோ அல்லது வேலைக்காகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ தனது வீட்டில் இருந்து பிரிந்து இருப்பவர்களை, வீட்டு நினைவால் வாடும் ‘ஹோம் சிக்னெஸ் ‘ (Home Sickness) பாதிப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். உண்மையில் ‘ஹோம் சிக்னெஸ் சிண்ட்ரோம்’ என ஒன்று இருக்கிறதா, அதற்கான தீர்வுகள் என்ன என விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சுபா சார்லஸ்…

மாதிரிப் படம்

‘ஹோம் சிக்னெஸ் சிண்ட்ரோம்’ என்றால் என்ன?

புலம்பெயர்தல் அல்லது நம் வீடு, மொழி, நமக்குப் பழகிய இடம் மற்றும் மனிதர்களை விட்டுத் தள்ளிச்சென்று எங்கேயோ முகம் தெரியாத மனிதர்கள் மற்றும் மொழி தெரியாத ஊரில் ஏதாவது ஒரு காரணத்திற்காக வாழ நேர்ந்தால், மிகப்பெரிய மன அழுத்தத்திற்கு உள்ளாகிறோம். இதற்குப் பெயர்தான் ‘ஹோம் சிக்னெஸ் சிண்ட்ரோம்’. இது கலாசார அதிர்ச்சியால்கூட ஏற்படலாம். ஒவ்வொரு மனிதரும் அவரது இடத்திற்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு கலாசாரத்தில் வாழ்வார். நாட்டுக்கு நாடு கலாசாரம் வேறுபாடும். அதுபோல ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கலாசாரம் உண்டு. மனிதன் ஒரு சமூக விலங்கு, ஆதலால் அவன் வேறு இடத்திற்குச் செல்லும்போது மன அழுத்தத்திற்கு உள்ளாகிறான். இந்த மன அழுத்தம் அதிகமாகும்போதுதான் ‘ஹோம் சிக்னெஸ் சிண்ட்ரோம்’ ஏற்படுகிறது.

இதன் அறிகுறிகள் என்னென்னெ?

மன அழுத்தம், கவலை, கோபம், எரிச்சல், சந்தேகங்கள் போன்றவை இருப்போருக்கும், ஏதாவது மனநோயால் அவர்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கும் அது அதிகரிக்கலாம் அல்லது புதிதாக மனநோய் ஏற்படலாம்.

இதனால் ஏற்படும் ஆபத்துகள் என்ன?

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் உளறுவது, சம்மந்தமில்லாமல் நடந்து கொள்வது என சைக்கோசிஸ் என்ற மனநோயால் பாதிக்கப்படலாம். இதன் உச்சபட்சமாக கொலை மற்றும் தற்கொலையிலும்கூட ஈடுபடலாம். ஆனால், ‘ஹோம் சிக்னெஸ் சிண்ட்ரோம்’ பாதிக்கப்பட்ட அனைவரும் சைக்கோசிஸ் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று கூறமுடியாது. பெரும்பாலும் அவர்கள், இந்தபாதிப்பில் இருந்து மீண்டு இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவர். இந்த சிண்ட்ரோம் தீவிரமாகும்போதுதான் சைக்கோசிஸ் ஏற்படுகிறது.

வீட்டு நினைவு

பாதிப்பு உண்டானால் என்ன செய்யலாம்?

இந்த சிண்ட்ரோம், புலம்பெயர்ந்த அனைவருக்கும் வருவதில்லை. இந்த மனநோயின் தாக்கம் இடத்திற்கும், அவர்களது விருப்பு வெறுப்பிற்கும் ஏற்ப வேறுபடலாம். இதன் பாதிப்பு அதிகபட்சமாக இருக்குமானால், அதற்கு நல்ல தீர்வாக அவர்கள் தங்களது இடத்திற்கே சென்று விடலாம். பெரும்பாலும் சில நாள்களிலேயே பல மனிதர்கள் புதிய சூழ்நிலைக்கு மெள்ள மெள்ளப் பழகிவிடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் சாதிக்க நிறைய வாய்ப்புகளும் உண்டு. அரிதாகச் சிலர், அந்த மன அழுத்தத்துடனேயே வாழப் பழகிவிடுவார்கள்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com