ஹோகடோ செமா – இந்த ஆண்டு பாரீஸில் நடந்துவரும் பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை கூட்டிய ஹீரோக்களில் ஒருவர். இவர், கடந்த வெள்ளிக்கிழமை நடந்த குண்டு எறிதல் போட்டியில் எஃப்.57 பிரிவில் 14.85 மீட்டர் தூரம் எறிந்து வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.
ஹோகடோ செமா, நாகாலாந்தைச் சேர்ந்தவர் ஆவார். இவருடையது விவசாய குடும்பம். இவர் ஒரு ராணுவ வீரர். இந்தியாவின் சிறப்பு அதிரடி படையில் சேர்வதே இவரது லட்சியம் ஆகும். ஆனால் 2002-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின்போது நடந்த கண்ணிவெடி தாக்குதலில், ஹோகடோ செமா தனது இடது காலை இழந்தார். இதனால் இவரது சிறப்பு அதிரடி படை கனவு கலைந்தது. அப்போது இவருக்கு 19 வயதுகூட ஆகியிருக்கவில்லை.

கனவு கலைந்ததால், சில காலம் முடங்கி போய் இருந்தவரது விளையாட்டு பயணம் கடந்த 2016-ம் ஆண்டு, அதாவது அவரது 32 வயதில்தான் தொடங்கியிருக்கிறது. புனேவில் உள்ள ராணுவ பாரா ஒலிம்பிக்ஸ் மையத்தில் தனது திறமையை மேம்படுத்தியிருக்கிறார். அங்கே அவரது சீனியர் ஆபீசரின் பரிந்துரைப்படி, குண்டு எறிதலை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
பயிற்சி எடுத்த எட்டே ஆண்டுகளில், பாரா ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ளார். இது இவருக்கு முதல் பதக்கம் அல்ல. 2022-ம் ஆண்டு மொரோக்காவில் நடந்த கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வெள்ளி வென்றுள்ளார். இந்த ஆண்டு உலக சாம்பியன் போட்டியில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
ஹோகடோ செமா பாரா ஒலிம்பிக்ஸில் 14.85 மீட்டர் தூரம் எறிந்ததே, இவர் அதிக தூரம் எறிந்த மீட்டர் ஆகும். ஹோகடோ செமா வெற்றியை தன் மனைவிக்கு சமர்பித்துள்ளார்.
“ஒரு ராணுவ வீரராக, ஒலிம்பிக்ஸில் நீரஜ் சோப்ராவால் இந்தியாவிற்கும், இந்திய ராணுவத்திற்கும் வெற்றியை தர முடியுமானால், பாரா வீரரான என்னால் ஏன் அந்த வெற்றியை தர முடியாது என்பதுதான் என்னுடைய உத்வேகத்திற்கு காரணம்.
இந்தியா மற்றும் இந்திய ராணுவத்தின் சார்பாக இந்த பதக்கம் வென்றதால், எனக்கு இந்த பதக்கம் மிகவும் ஸ்பெஷலானது” என்று தனது வெற்றிக்குப் பிறகு ஹோகடோ செமா பேசியுள்ளார்.