டிசம்பர் 30 2022 ரிஷப் பண்ட் வாழ்க்கையைத் திருப்பிப் போட்ட எதிர்பாரா விபத்து ஒன்று நடக்கிறது.
தன்னுடைய அம்மாவைப் பார்ப்பதற்காக உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்தபோது அவரது கார், சாலைத் தடுப்பின் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. கால், கையெல்லாம் உடைந்து, எலும்புகள் நொறுங்கி, உடம்பில் தீ காயங்கள் ஏற்பட்டன. இவரை மருத்துவர்கள் காப்பாற்றி விடலாம், ஆனால் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவது கடினம்தான் என்று பலரும் கூறினார்கள். ஒரு ஸ்டார் வீரராக உயர்ந்துகொண்டிருந்த சமயத்திலேயே பண்ட்டின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதோ எனும் அச்சம் அனைவருக்கும் தொற்றிக் கொண்டது. ஆனால், பண்ட்டின் கதை அத்தோடு முடியவில்லை.

U19 மூலம் கிரிக்கெட்டில் கால் பதித்து இந்திய அணிக்குள் வந்து வெற்றிகரமாக விளையாடிக்கொண்டிருந்த ஒரு திறன்மிக்க வீரர் ரிஷப் பண்ட். போட்டிக்கு முன்பு அவர் அடிக்கும் கமென்ட்டுகள், அவருடைய பேட்டிங் ஸ்டைல் என அனைத்திற்கும் ரசிகர்கள் உண்டு. ‘ஸ்பைடர்மேன்’ எனச் செல்லமாக அவருக்குப் பெயரும் வைத்திருந்தார்கள். தோனிக்குப் பிறகு இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்டர் அவர்தான் எனும் நிலை உருவாகியிருந்தது.
அப்படிப்பட்ட சமயத்தில்தான் அந்த விபத்து. ஐ.பி.எல்-இல் டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்த ஒரு வீரர், 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல்-இன்போது போட்டிகளை வெளியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

ரிஷப் பண்ட் அடுத்து என்ன செய்யப் போகிறார்; எப்போது கம்பேக் கொடுக்கப்போகிறார்; அப்படி கம்பேக் கொடுத்தாலும் அவரால் முன்பைப்போல சிறப்பாக ஆட முடியுமா என ரசிகர்கள் மனதில் எக்கச்சக்க கேள்விகள். ஆனால், பண்ட் இதற்கெல்லாம் பதில் வைத்திருந்தார். படுக்கையிலிருந்து எழுந்து கடுமையான பயிற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தார். சிகிச்சையின் வழி தன் மேல் ஒட்டியிருந்த அயர்ச்சி சங்கிலிகளைப் பயிற்சியின் வழி அறுத்தெறிந்து மீண்டும் மைதானத்திற்குள் காலடி எடுத்து வைத்தார்.
“கார் விபத்திற்குப் பிறகு இந்த உலகத்தில் என்னுடைய வாழ்வு முடிந்துவிட்டது என்று நினைத்தேன். மீண்டும் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடர்வது என்பது அதிசயமாக இருக்கிறது. மீண்டும் கிரிக்கெட் விளையாடப்போவது உற்சாகமாகவும், அதே சமயத்தில் பதட்டமாகவும் உள்ளது. நான் மீண்டும் ஒரு அறிமுக வீரராகக் களமிறங்குவதைப் போல உணர்கிறேன்” என்று உருக்கமாகப் பேசியிருந்த பண்ட் மீண்டும் கிரிக்கெட் களத்துக்குள் புகுந்தார்.

14 மாதங்கள் கழித்து முழுவதுமாகப் பயிற்சிகளை மேற்கொண்டு ஒரு புது மனிதராக 2024-ல் நடைபெற்ற ஐ.பி.எல்-இல் கம்பேக் கொடுத்தார். அந்த ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் டெல்லி அணியைச் சிறப்பாக வழி நடத்தியிருந்தார்.
“கடந்த ஒன்றரை வருட காலத்தை என் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பிய நாள்களாகத்தான் பார்த்தேன். என்ன நடந்தாலும், நான் மீண்டும் மைதானத்திற்கு வர வேண்டும் என்ற வைராக்கியம் எனக்கு இருந்தது. வேறு எதைப் பற்றியும் நான் சிந்திக்கவில்லை. ஒரு கிரிக்கெட் வீரராக 100 சதவிகிதத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்” என்று அப்போது தன்னம்பிக்கையுடன் பேசியிருந்தார்.
விபத்திற்குப் பிறகு அவர் ஐ.பி.எல்-இல் மிகச்சிறப்பாக விளையாடியதைப் பார்த்த பண்ட்டிற்கு நடந்து முடிந்த உலகக்கோப்பையில் பேட்டிங்கில் நம்பர் 3 இடத்தை ரோஹித் சர்மா கொடுத்தார். விபத்து ஏற்பட்டு இருப்பதால் பண்ட் விக்கெட் கீப்பிங்கை சரியாகச் செய்யமாட்டார் என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால், எப்போதும் பேட்டிங்கை சிறப்பாகக் கையாளும் பண்ட் இந்த உலகக் கோப்பைத் தொடரில் விக்கெட் கீப்பிங்கை அதைவிட மிகச்சிறப்பாகக் கையாண்டு அப்லாஸ் வாங்கினார்.

தற்போது நடந்து முடிந்த இந்தியா- வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம்பெற்றிருந்தார் பண்ட். டெஸ்ட் போட்டிகளில் ஒரு கிரிக்கெட் வீரர் நன்றாக ஆடினால்தான் ஒருவரை முழுமையான கிரிக்கெட் வீரர் என்று சொல்லுவார்கள். கார் விபத்தால் எந்த ஒரு டெஸ்ட் தொடரிலும் 2 வருடங்கள் பங்கேற்காமலிருந்த பண்ட் இந்த டெஸ்ட் தொடரில் உத்வேகத்துடன் செயல்பட்டு சதம் அடித்து சாதனை படைத்தார். அணியின் வெற்றிக்கும் முக்கிய பங்காற்றினார். அடுத்தடுத்த போட்டிகளிலும் கலந்துகொண்டு சிறப்பாகச் செயல்பட ஆயத்தமாகி வருகிறார்.
பல அனுபவங்களை இந்த விபத்து அவருக்குத் தந்திருக்கும். வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்த பண்ட் மீண்டும் கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்பட ஆரம்பித்துவிட்டார். ஒரு விஷயத்தின் மீது ஒரு மனிதருக்குத் தீராத காதல் இருந்தால் அது எத்தனை தடைகளைத் தாண்டியேனும் நம்மைச் சரியான இடத்திற்கு அழைத்துச் செல்லும். அதற்கு பண்ட்தான் ஆகச்சிறந்த உதாரணம்.

இன்று பண்ட் தனது 27 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!!!