Happy Teeth: பற்களின் நிறம் திடீரென்று மாறுகிறதா?

Share

முத்துப் போல பற்கள், பச்சரிசி பல்வரிசை, முல்லைப்பூ மாதிரி பல் வரிசை என்றெல்லாம் பற்களின் அழகை வர்ணிப்பார்கள். பற்கள் பளிச்சென்று இருக்க வேண்டும் அனைவரும் விரும்புவதுதான்.

smile

பற்கள் வசீகரமாக இருக்க வேண்டும் என்றால் பற்களை முறையாகப் பராமரிப்பது மட்டுமல்லாமல் நம் பழக்கவழக்கங்களிலும் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

பற்களின் நிறம் மாறுவதற்கு என்ன காரணங்கள், அதற்கான தீர்வுகள் பற்றி விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஏக்தா:

“விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல் ‘பளிச்’ வெள்ளை நிறத்தில் யாருக்கும் பற்கள் இருக்காது. இந்திய மக்கள்தொகையைப் பொறுத்தவரை அனைவருக்குமே சற்று மஞ்சள்தன்மையுடன்தான் பற்கள் காணப்படும். மஞ்சள்தன்மையின் அளவுதான் நபருக்கு நபர் வேறுபடும்.

Teeth (Representational Image)

வெள்ளை நிறத்தில் இருந்தால் ஏதோ பிரச்னை இருப்பதாக அர்த்தம் என்பதால் மருத்துவரை அணுகவும். வழக்கத்தைவிட பற்களின் மஞ்சள் நிறம் மாறுகிறது என்றால் அதற்கு சில காரணங்கள் இருக்கலாம். வழக்கத்தைவிட பற்களின் மஞ்சள் நிறம் அதிகமாகிறது என்றால் பல் தேய்கிறது என்று அர்த்தம்.

பற்களில் மேலே உள்ள எனாமல் சரியாக உருவாகாமல் இருந்தால் நிறமாற்றம் இருக்கும். பற்களின் நடுவில் சிக்கும் உணவுத்துகள்கள் நீண்ட காலமாகத் தங்கியிருந்தால் வெள்ளை, மஞ்சள் நிறங்களில் தெரியும். சிலருக்கு பழுப்பு (Brown) நிறத்தில்கூட தெரியும்.

Smoking

பற்களின் இரண்டாவது அடுக்கு பழுப்பு நிறத்தில் இருக்கும். அதனால் பற்கள் தேய்மானமானாலும் பழுப்பு நிறமாகத் தெரிய வாய்ப்புள்ளது. அந்த நிலையில் பல் கூச்சமும் ஏற்படும் என்பதால் உடனடியாக அருகிலிருக்கும் பல் மருத்துவரைப் பார்க்க வேண்டும். உணவுப்பழக்கமும் பற்களின் நிறம் மாறுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதாலும் பற்களின் நிறம் மாறும்.

புகைப்பழக்கம், புகையிலை, மதுப்பழக்கமும் பற்களின் நிற மாற்றத்துக்கு காரணமாக இருக்கலாம். அசிடிட்டி, இரைப்பை அழற்சி (Gastritis) உள்ளிட்ட பிரச்னைகள் அதிகமாக இருந்தால் பற்களின் நிறம் மாற வாய்ப்புள்ளது. சிலருக்கும் தூங்கும்போது, படுத்திருக்கும்போது வயிற்றிலிருக்கும் ஆசிட் மேற்புறத்துக்கு எதுக்களிக்கும் பிரச்னை இருக்கும். இதனாலும் பற்களின் நிறத்தில் மாறுபாடு ஏற்படும்.

பல் மருத்துவர் ஏக்தா

பற்களின் நிறம் மாறியிருக்கிறது என்று கடினமாக பிரஷ் செய்வதாலோ, வழக்கத்தைவிட அதிகமான நேரம் பிரஷ் செய்வதாலோ, அடிக்கடி பிரஷ் செய்வதாலோ அதற்குத் தீர்வு கிடைக்காது. இதுபோன்ற செயல்கள் பற்களை கூடுதலாக சேதப்படுத்துமே தவிர நிறம் மாறாது. பற்களில் திடீரென்று நிற மாற்றம் ஏற்படுகிறது என்றால் அருகிலிருக்கும் பல் மருத்துவரை அணுகி காரணத்தைக் கண்டறிந்து, தேவைப்பட்டால் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல முறையாக பிரஷ் செய்யாவிட்டால் பற்களின் மேலே உள்ள எனாமல் சேதமடைய வாய்ப்புள்ளது. பற்களிலிருக்கும் எனாமல் ஒருமுறை போய்விட்டால் மீண்டும் தானாக உருவாகாது. பல் பராமரிப்புக்காக குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவரை அணுகி, தேவையான சிகிச்சை, சீரமைப்புகளைச் செய்து வந்தால் பற்களின் எனாமல் பல ஆண்டுகளுக்கு பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாக இருக்கும்” என்றார்.

Happy Teeth

பற்கள் பாதுகாப்பு, சிகிச்சை, வாய் சுகாதாரம் தொடர்பான சந்தேகங்களுக்கு விடைகளையும் ஆலோசனைகளையும் அளிக்கும் Happy Teeth தொடர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும்.

பற்கள் பராமரிப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கமென்ட்ஸில் தெரிவிக்கவும். உங்கள் கேள்விகளுக்கு பல் மருத்துவர்கள் பதில் அளிப்பார்கள்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com