இந்திய-சீன வகை உணவுகள் இந்தியாவில் பிரபலமாகி பலரின் ஃபேவரைட் உணவாக இருந்து வருகிறது.
அதில் மிகவும் பிரபலமானது மஞ்சூரியன் வகை உணவுகள். இந்த மஞ்சூரியன் வகைகளில் முதலில் அறிமுகமானது சிக்கன் மஞ்சூரியன்தான். மும்பையில் உணவகம் வைத்திருந்த பிரபல சீன செஃப் நெல்சன் வாங் என்பவர் தான் முதலில் சிக்கன் மஞ்சூரியன் உணவைத் தயார் செய்தார். இது 1970களில் இந்திய கிரிக்கெட் கிளப்பில் பரிமாறப்பட்ட உணவுகளில் சிக்கன் மஞ்சூரியன் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதன் சைவ வெர்ஷனாக வந்ததுதான் ‘கோபி மஞ்சூரியன்’. காலிஃப்ளவர் துண்டுகளை மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், இட்லி மற்றும் சோள மாவு கரைத்த கரைசலில் முக்கி எடுத்து எண்ணெய்யில் போட்டு, சுவைக்காக சாஸ் சேர்த்துத் தயாராகும் இந்த ‘கோபி மஞ்சூரியன்’ சைவப்பிரியர்களின் விருப்பமான உணவாகும்.

எளிதில் வேகமாகத் தயாராகும் உணவு என்பதால் சுற்றுலாத் தளங்களில், விழாக்களில் இந்த உணவிற்கு அதிக வரவேற்பு உண்டு. அப்படித்தான் கோவாவில் இது பிரபலமானது. கோவாவின் எந்தப் பக்கங்களில் திரும்பினாலும் கோபி மஞ்சூரியன் கடைகளைப் பார்க்கலாம்.
இந்நிலையில் கோவாவின் மபூசா மாநகரம் இந்த உணவுக்கு இப்போது தடைவிதித்துள்ளது.
கோபி மஞ்சூரியனில் செயற்கை நிறங்கள், அதிக ரசாயனம் கொண்ட சாஸ் பிளேவர்கள் கலக்கப்படுவதும், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதும் இந்த தீடீர் தடைக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. கோவாவில் கோபி மஞ்சூரியன் தடை செய்யப்படுவது இது முதல் முறையல்ல. நீண்ட காலமாகவே இந்த உணவில் சுகாதாரம் தொடர்பாகப் பிரச்னைகள் இருந்து வந்துள்ளது. 2022ஆம் ஆண்டிலும் ஸ்ரீ தாமோதர் கோவிலில் நடந்த வாஸ்கோ சப்தா கண்காட்சியின் போது உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) இதற்குத் தடை விதித்தது. தற்போது கோவாவின் மபூசா மாநகரம் இந்த உணவுக்கு இப்போது தடைவிதித்தது பேசுபொருளாகி வருகிறது.