சங்கோத் சிங் பிறகு தன்னுடைய மற்ற மகன்களுடன் உத்ரகாண்ட்டுக்கு குடிபெயர்கிறார். தொழிலதிபராக சுகபோகமாக வாழ்ந்தவர், அங்கே ஆட்டோ ஓட்டி பிழைக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். இறுதியில் அவரின் முடிவும் துயரமானதே. ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இந்திய அணிக்காக ஆடி பல சாதனைகளையும் செய்து கொண்டிருக்கும் தன்னுடைய பேரனை நேரில் சந்திக்க வேண்டும் என்கிற அவரின் ஆசையும் கனவாகவே போனது.

‘தந்தை இழந்த பும்ராவின் நிலை!’
விவரமே அறியாத வயதில் தந்தையை இழந்ததால் நிறைய பொருளாதார நெருக்கடிகளை இளம் வயதிலேயே பும்ரா எதிர்கொள்ள ஆரம்பித்தார். ஒரு பால் பாக்கெட் வாங்க கூட காசில்லாமல் கஷ்டப்பட்டனர் என பும்ராவின் குடும்பத்துக்கு நெருக்கமான பத்திரிகையாளர் தீபாள் திரிவேதி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரே ஜெர்சி, ஒரே ட்ராக் பேண்ட், ஒரே பழைய ஷூ என அதையே மாற்றி மாற்றி துவைத்து பயன்படுத்தும் நிலையில்தான் அந்த சிறுவயது பும்ரா இருந்திருக்கிறார். ஆனால், அந்த ஏழ்மையெல்லாம் அவருக்கு எங்கேயும் தடைக்கல்லாக மாறவில்லை.
`சொல்லப்போனால் அப்பாவை இழந்து பொருளாதார சுமைகளை எதிர்கொண்டதால்தான் அம்மாவுடனும் அக்காவுடனும் இன்னும் நெருக்கமானேன். அந்த கஷ்டங்கள்தான் எங்களுக்கிடையேயான பிணைப்பை இன்னும் வலுப்படுத்தியது’ என பும்ராவே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.